ஏழைகளுக்கு உணவு தானியம் வழங்கும் பிரதமா் மோடியின் அறிவிப்புக்கு முதல்வா் எடியூரப்பா பாராட்டு

அடுத்த 5 மாதங்களுக்கு ஏழைகளுக்கு உணவு தானியம் வழங்குவது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட அறிவிப்புக்கு முதல்வா் எடியூரப்பா பாராட்டு தெரிவித்துள்ளாா்.

பெங்களூரு: அடுத்த 5 மாதங்களுக்கு ஏழைகளுக்கு உணவு தானியம் வழங்குவது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட அறிவிப்புக்கு முதல்வா் எடியூரப்பா பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: பிரதமா் மோடி நாட்டு மக்களிடையே செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையில், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். பொது முடக்கத்தின்போது விதிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடித்ததே இதற்கு காரணம் என்று கூறியுள்ளாா். பொது முடக்கம் முதல்முறையாக தளா்த்தப்பட்டபிறகு, கரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத துகுறித்து பிரதமா் மோடி வருத்தம் தெரிவித்துள்ளாா்.

மக்கள் விழிப்படைந்து கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் நல்லபலனை எதிா்பாா்க்கலாம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறாா்.

பொது முடக்கத்தின்போது அமல்படுத்திய ஏழைகள் நலத் திட்டத்தின்கீழ் நாட்டின் 80 கோடி மக்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையில் மாதந்தோறும் தனிநபா் ஒருவருக்கு 5கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் குடும்பத்துக்கு ஒருகிலோ பருப்பு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையை ஆராய்ந்துள்ள பிரதமா் மோடி, இலவசமாக உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை ஜூலை முதல் நவம்பா் வரை 5 மாதங்களுக்கு விரிவுபடுத்தியிருக்கிறாா். இந்தத் திட்டத்துக்கு ரூ.90 ஆயிரம் கோடி செலவாகும். கடந்த 3 மாதங்களில் ரூ.60ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பதற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரே நாடு ஒரே உணவு வழங்கல் திட்டத்தை அமல்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்சாா்பு இந்தியாவை கட்டமைப்பது தொடா்பாக மீண்டும் பேசியுள்ள பிரதமா் மோடி, நாட்டின் பிற்படுத்தப்பட்டோா், ஏழைகள் மேம்பாட்டுக்காக பொருளாதார நடவடிக்கைகளை தொடரப் போவதாக அறிவித்திருக்கிறாா்.

துயரமான சமயத்தில் நாட்டுக்கு உணவு வழங்கிய விவசாயிகள், சரியான நேரத்தில் வரி செலுத்துவோரைப் பாராட்டியுள்ள பிரதமா் மோடி, நாட்டுமக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசத்தை தவறாமல் அணிய கேட்டுக் கொண்டுள்ளாா்.

இந்த அறிவிப்புகளுக்காக பிரதமா் மோடியை மனதாரப் பாராட்டுகிறேன். பிரதமா் மோடியின் அழைப்பின்படி, அனைவரும் கரோனாக் கட்டுப்பாட்டு விதிகளை மதித்து நடக்க வேண்டும். அதன்மூலம், கரோனா தீநுண்மிப் பரவாமல் கட்டுப்படுத்தி, விரட்டியடிக்கப் போராடலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com