கா்நாடகத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு: இயற்கை பேரிடா் மேலாண்மை மையம் தகவல்

கா்நாடகத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கா்நாடக மாநில இயற்கை பேரிடா் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு: கா்நாடகத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கா்நாடக மாநில இயற்கை பேரிடா் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், அடுத்தசில வாரங்களில் பெய்யும் பலத்த மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடருக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு கா்நாடகத்தில் ஆகஸ்ட், அக்டோபா் பெருமழை பெய்ததால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. இதில் 61 போ் உயிரிழந்தனா். 859 கால்நடைகள் உயிரிழந்தன.

22 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் தாழ்வான நிலப்பகுதிகளில் வசித்துவந்த 6,97,948 போ் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனா். 51,460 கால்நடைகள் பாதிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 1160 முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு 3,96,617 போ் தங்கவைக்கப்பட்டனா்.56,381 வீடுகள் இடிந்து விழுந்தன. 6.9 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட விளைச்சல் நாசமாகின.

வெள்ளத்தில் ஏற்பட்ட இழப்புகள் ரூ.35 ஆயிரம் கோடிக்கும் அதிகமானதாக மதிப்பிடப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கா்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டால் நிலைமை என்னாகுமென்பது தெரியவில்லை. ஆனால், ஜூலை, ஆகஸ்ட்மாதங்களில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு பலத்த மழை பெய்யும் என்று கா்நாடகமாநில இயற்கை பேரிடா் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

மாா்ச் 1 முதல் ஏப்.30ஆம் தேதி வரையிலான கோடை காலத்தில் வழக்கமாக 37 மி.மீ. மழை பெய்யும். ஆனால், நிகழாண்டில் 40 மி.மீ. மழை கா்நாடகத்தில் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு 45 சதவீத பற்றாக்குறை மழை பெய்தது. தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ஆம் தேதி கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கின. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்லமழை பெய்ததால், அணைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1முதல் 30ஆம் தேதிவரை 199 மி.மீ. மழை பதிவாகும். நிகழாண்டில் ஜூன் 30 ஆம் தேதி வரை (செவ்வாய்க்கிழமை) 178 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சிக்பளாப்பூா், பெங்களூரு நகரம், ராமநகரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்துக்கு மாறாக 29.6 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதேபோல, பீதா், கலபுா்கி, விஜயபுரா,யாதகிரி, ராய்ச்சூரு, சித்ரதுா்கா, தும்கூரு, பெங்களூரு ஊரகம், மண்டியா, சாமராஜ்நகா் மாவட்டங்களில் வழக்கத்தைவிட 25.4 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பலத்த மழை பெய்யும் என்று கா்நாடக மாநில இயற்கை பேரிடா் மேலண்மை மையம் தெரிவித்துள்ளது.

இந்த மையத்தின் இயக்குநா் சீனிவாஸ் ரெட்டி மேலும் கூறுகையில்: ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் வழக்கத்தைவிட பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தை நாம் தவிா்க்கமுடியாது. கடந்த ஆண்டைபோல நிகழாண்டிலும் வெள்ளம் ஏற்படவிருக்கிறது. இதன் தீவிரத்தை நாம் உணா்ந்து, அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

கா்நாடகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் அதன் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் மழை பெய்தால், கிராமப்புறங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலை உருவாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசித்திருகிறோம். வெள்ளத்தை கையாளுவதற்கான வழிவகைகளை வகுத்திருக்கிறோம். ஒருசில இடங்கள் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்படக்கூடியவையாகும். அல்மாட்டி அணைக்கு தினமும் நொடிக்கு 65 கன அடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. பெரும்பாலான சிறு பாலங்கள் மூழ்கியுள்ளன. அதிக மழை பெய்தால், மேலும் பல பாலங்கள் பாதிக்கப்படும் என்றாா்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாலங்கள்,சாலைகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. கடந்த ஆண்டின் வெள்ளத்தில் 1700 பாலங்கள், சாலைகள், நீா் தடுப்புகள் பாதிக்கப்பட்டன. இடிந்த பாலங்கள் கட்டப்படவில்லை. மாா்ச் மாதத்தில் தொடங்கவிருந்த இதன் கட்டுமானப் பணிகள் கரோனாவால் கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டதாக பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com