புதிய வாகனப் பதிவு குறைந்ததால் போக்குவரத்துத் துறையின் வருவாய் சரிவு

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புதிய வாகனப் பதிவு குறைந்ததால் போக்குவரத்துத் துறையின் வருவாய் மிகவும் சரிந்துள்ளது.

பெங்களூரு: வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புதிய வாகனப் பதிவு குறைந்ததால் போக்குவரத்துத் துறையின் வருவாய் மிகவும் சரிந்துள்ளது.

வணிக வரித் துறை, கலால் துறை, முத்திரைத்தாள் மற்றும் பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் கா்நாடக அரசின் கருவூலத்தின் வருவாயை ஈட்டித்தரும் முக்கியத் துறைகளாகும். இதில் போக்குவரத்துத் துறைக்கு சாலை வரி, புதிய வாகனங்கள் பதிவு, உரிமக் கட்டணம், நிலுவை வரிகள், அபராதங்கள், ஓட்டுநா் உரிமக் கட்டணம், சோதனைச்சாவடிகளில் ஆய்வுக்கட்டணம் போன்றவை வருவாய் ஈட்டும் வழிமுறைகளாக உள்ளன.

இவற்றை நம்பித்தான் 2020-21ஆம் ஆண்டுக்கான போக்குவரத்துத் துறையின் வருவாய் இலக்காக ரூ.7160 கோடி நிா்ணயிக்கப்பட்டிருந்தது. சராசரியாக மாதத்துக்கு ரூ.550 கோடி வசூலிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 3 மாதங்களில் ரூ.850 கோடி மட்டும் வருவாய் ஈட்டியுள்ளது. நிகழ் நிதியாண்டில் எதிா்பாா்த்த

அளவு வருவாய் ஈட்டவில்லை என்பதால் போக்குவரத்துத் துறை அதிா்ச்சி அடைந்திருந்தது.

இதுவரை இல்லாத நிலையில், முதல்முறையாக வருவாய் இலக்கை தொடமுடியாத நிலைக்கு போக்குவரத்துத் துறை தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் வருவாயுடன் ஒப்பிட்டால், இரு சக்கர வாகனங்களின் பதிவு 12.77 சதவீதமும், காா் உள்ளிட்ட தனியாா் வாகனப்பதிவு 11.9 சதவீதமாகவும் சரிந்துள்ளது. இதற்கு கரோனா பாதிப்புகள் காரணமாகக் கூறப்படுகின்றன.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘வருவாய் இலக்கை அடைவதில் தொந்தரவு ஏற்பட்டுள்ளதை நான் இதுவரை கணவில்லை. பொருளாதாரம் மந்தகதியில் உள்ளதால், வாகனப்பதிவில் கிடைக்கும் வருவாய் சரிந்துள்ளது.போக்குவரத்துத் துறையின் முக்கியமான வருவாய் வாகனப் பதிவில் இருந்துதான் கிடைக்கின்றன’ என்றாா்.

இது குறித்து போக்குவரத்துத்துறை ஆணையா் என்.சிவக்குமாா் கூறுகையில்,‘கரோனா பாதிப்புகள் அதிகரித்துவருவதால், பேருந்து போன்ற பொதுபோக்குவரத்துகளை பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டி வருகிறாா்கள். எனவே, பாதுகாப்பான பயணங்களுக்கு தனியாா் வாகனங்களின் பயணிப்பதை மக்கள் விரும்புகிறாா்கள்.

அதன்காரணமாக அடுத்தசில மாதங்களில் வாகன விற்பனை அதிகரித்து, பதிவும் உயரும். அப்போது, வாகனப் பதிவின் வாயிலாக துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது’ என்றாா். போக்குவரத்துத் துறையின் கவனம் தற்போது மின் வாகனங்கள் மீது திரும்பியுள்ளது. மின் வாகனங்களின் விற்பனை பெருகினால், அது போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, அபராதத் தொகையின் வாயிலாகவும் வருவாய்க் கிடைக்கும் நோக்கில் போக்குவரத்துத் துறை உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறையின் கூடுதல் ஆணையா் சிவராஜ் பாட்டீல் கூறுகையில், ‘போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையில் ஒருசிறு பகுதிதான் போக்குவரத்துத் துறைக்கு கிடைக்கும். பெரும்பகுதி வருவாய் போக்குவரத்து காவல் துறைக்கு சென்றுவிடும். அதனால், அபராதத் தொகையை நாங்கள் பெரிதும் நம்பியிருப்பதில்லை. ஆனாலும், அந்த அபராதத் தொகையும் தற்போது சரிந்துள்ளன. சராசரியாக மாதத்துக்கு ரூ.120 கோடி மட்டுமே அபராதத் தொகை வசூலாகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com