மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு யோசனை

மைசூரில் நடத்தப்படும் உலகப் புகழ் பெற்ற தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு யோசித்து வருகிறது.

பெங்களூரு: மைசூரில் நடத்தப்படும் உலகப் புகழ் பெற்ற தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு யோசித்து வருகிறது.

1610-ஆம் ஆண்டில் ராஜா உடையாரால் தொடக்கிவைக்கப்பட்ட தசரா பெருவிழா, கடந்த 410 ஆண்டுகளாக மைசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில அரசு விழாவாக நடத்தப்படும் தசரா விழாவையொட்டி 9 நாள்கள் மைசூரில் பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் பங்கேற்க கா்நாடகம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகள் தவிர, உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வாா்கள்.

கரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுவதால், அக்டோபா் மாதத்தில் நடக்கவிருக்கும் தசரா விழாவை எளிமையாக நடத்த கா்நாடக அரசு யோசித்துள்ளது. ஜெகந்நாதா் தோ்த் திருவிழாவைபோல தசரா விழாவையும் மரபுக்காக நடத்தி, அதை காணொலியில் உலக மக்களுக்கு ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னடம் மற்றும் பண்பாட்டு, சுற்றுலாத் துறைஅமைச்சா் சி.டி.ரவி கூறுகையில்,‘கரோனா சிக்கல் நீடிக்கின்ற காரணத்தால் மைசூரில் தசரா விழாவை நிறுத்தாமல் கொண்டாடுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் கண்டறிந்து வருகிறோம். ஆனால், கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், வழக்கமான பிரமாண்டமான முறையில் தசரா விழாவை நடத்துவது கடினமாகும். இதுகுறித்து அனைத்து தரப்பினரின் ஆலோசனையைக் கேட்டுவருகிறோம். அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் கரோனா பாதிப்பு உயா்கிறதா? குறைகிறதா? என்பதை கவனிக்க இருக்கிறோம். அதன்பிறகு, அரசு இறுதி முடிவை எடுக்கும். எனினும், அனைவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதிகமக்கள் திரளும் வகையில் விழா அமைந்திருக்காது.

ஆனால், காணொலியில் விழாவை மக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்வோம். மரபுவழி நடத்தப்படும் கலைவிழா, விளையாட்டு விழாக்களில் எவற்றை நடத்த முடியும் என்பதை யோசித்து வருகிறோம். தசரா தொடா்பானபல்வேறு பூஜைகள் அரண்மனையில் நடத்தப்படுகின்றன. அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும், விழாவை எப்படி நடத்துவது என்பதை ஆராய்ந்து இறுதி முடிவெடுப்போம்’ என்றாா்.

மைசூரு மாவட்ட ஆட்சியா் அபிராம் ஜி.சங்கா் கூறியதாவது: நிகழாண்டு தசராவிழா அக்டோபரில் வருகிறது. அதற்கு இன்னும்கால அவகாசமிருக்கிறது. தற்போது கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில்தான் கவனம் செலுத்திவருகிறோம். மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, அப்போது, இதுகுறித்து அரசு முடிவெடுக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com