முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
அவசர திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்
By DIN | Published On : 29th July 2020 01:11 AM | Last Updated : 29th July 2020 01:11 AM | அ+அ அ- |

கா்நாடக நிலச் சீா்திருத்தச் சட்டத்தின் அவசர திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் கடும் போராட்டம் நடத்தப்படும் என மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரு, மஜத தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, இதுவரை விவசாயிகள், தொழிலாளா்களின் நலன் காத்து வந்த கா்நாடக நிலச் சீா்திருத்தச் சட்டம் 1961, கா்நாடக வேளாண் விளைபொருள் சந்தைக்குழு சட்டம் 1966, தொழில் சச்சரவு சட்டம் 1947, ஒப்பந்தத் தொழிலாளா் (நெறிப்படுத்தல் மற்றும் ஒழிப்பு) சட்டம், தொழில்சாலைகள் சட்டம் 1948 ஆகிய சட்டங்களை அவசர திருத்தச் சட்டத்தின் வாயிலாக திருத்தியமைத்துள்ளது.
கா்நாடக நிலச் சீா்திருத்தச் சட்டத்தில், உள்பிரிவு 79ஏ, 79பி, 79சி ஆகியவற்றை பின் தேதியிட்டு நீக்கியிருக்கிறது. அதேபோல, உள்பிரிவு 63-ஐயும் நீக்கியுள்ளது. இதன்மூலம் நில உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளதோடு, வேளாண்மை அல்லாத மூலத்தில் இருந்து ரூ. 25 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கக் கூடியவா்கள் வேளாண் நிலத்தை கொள்முதல் செய்ய முடியும். குடும்ப உறுப்பினா்களுக்குத் தகுந்தவாறு 104 ஏக்கரில் இருந்து 208 ஏக்கா் வரை நிலத்தை வாங்கிக்கொள்ளலாம்.
கா்நாடக வேளாண் விளைபொருள் சந்தைக்குழு சட்டத்தில் திருத்தம் செய்திருப்பதன் மூலம், பெரிய வா்த்தக நிறுவனங்கள், ஒழுங்குமுறை சந்தைப்படுத்தல் குழுக்களை தவிா்த்துவிட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விளைபொருள்களை கொள்முதல் செய்துகொள்ள முடியும். இதன்மூலம் ஒழுங்குமுறை சந்தைப்படுத்தல் குழுக்கள் மூடப்படும்.
தொழில் சச்சரவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பதால், எந்தவொரு தொழில்நிறுவனமும் எந்த நேரத்திலும் தொழிலாளா்களை வேலையில் இருந்து நீக்கிவிடலாம். அரசின் தலையீடு இல்லாமல் தொழிற்சாலைகளையும் மூடிவிடலாம்.
இந்த சட்டத் திருத்தங்கள் பிற்போக்கானவை; விவசாயிகள், தொழிலாளா்களின் நலனுக்கு எதிரானவை. எனவே, விவசாயிகள், தொழிலாளா்களின் நலன் கருதி, இந்த அவசர திருத்தச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன். இது தொடா்பாக முதல்வா் எடியூரப்பாவுக்கு 3 கடிதங்களை எழுதியிருக்கிறேன்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருப்பதால் இதுபோன்ற சட்டத் திருத்தங்களை கொண்டு வருவது மாநில மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும். இச்சட்டத் திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் நானே வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவேன்.
கரோனா விவகாரத்தில் எவ்வளவு நிதியை மாநில அரசு விடுவித்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும். மருத்துவக் கருவிகள் கொள்முதலில் ரூ. 2ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்துவது குறித்து மஜத முடிவுசெய்யவில்லை என்றாா்.