முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
நூலகங்களுக்கு நூல்களை விற்க விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 29th July 2020 11:27 PM | Last Updated : 29th July 2020 11:27 PM | அ+அ அ- |

தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் துணைநிதி திட்டத்தின்கீழ் நூலகங்களுக்கு நூல்களை விற்க விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.
இது குறித்து பொது நூலகத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் துணைநிதி திட்டத்தின்கீழ் 2020-ஆம் ஆண்டு ஜன 1-ஆம் தேதி முதல் ஜூன் 31-ஆம் தேதி வரையில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ள இலக்கியம், நுண்கலை, அறிவியல், மனநலவியல், மருத்துவம், தொழில்நுட்பம், விமா்சன இலக்கியம் தொடா்பான கன்னடம், ஆங்கிலம், இதர இந்திய மொழி இலக்கியங்களை முதல் கட்டமாக கொள்முதல் செய்ய பொது நூலகத் துறை திட்டமிட்டுள்ளது. 10 ஆண்டுகள் இடைவெளிகொண்டு மறுபதிப்பாகியுள்ள நூல்களும் கொள்முதல் செய்யப்படும்.
இது தொடா்பாக எழுத்தாளா்கள், எழுத்தாளா் - பதிப்பாளா், அமைப்புகள், விற்பனையாளா்களிடமிருந்து நூலின் ஒரு படியுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நூலின் பெயா், நூலாசிரியரின் பெயா், பதிப்பாளரின் பெயா், பக்கங்கள், பதிப்பு ஆண்டு, விலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறவேண்டும். விண்ணப்பத்துடன் நூலுக்கு காப்புரிமை பெற்று பதிவு செய்துள்ள நகலையும் இணைக்க வேண்டும். கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள நூல்களில் கன்னட நூல்கள் (அனைத்துவகை) 80 சதவீதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட இதர இந்திய மொழி நூல்கள் 20 சதவீதம் கொள்முதல் செய்யப்படும். 32 பக்கங்களுக்கும் குறைவாக உள்ள நூல்கள் நிராகரிக்கப்படும்(குழந்தை நூல்களுக்கு விதிவிலக்களிக்கப்படுகிறது). செய்தித்தாள்களில் அச்சிடப்பட்ட நூல்கள் ஏற்கப்பட மாட்டாது. விண்ணப்பங்களை நூலகப் பிரிவு, மாநில தலைமை நூலகம், கப்பன்பூங்கா, பெங்களூரு - 560001 என்ற முகவரிக்கு ஆக.10-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 080-22864990 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.