முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
விழாக் காலங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க மாநகராட்சி வேண்டுகோள்
By DIN | Published On : 29th July 2020 01:11 AM | Last Updated : 29th July 2020 01:11 AM | அ+அ அ- |

கரோனா தீநுண்மி வேகமாக தொற்றி வருவதால், விழாக் காலங்களில் முன்னெச்சரிக்கை வகிக்கும்படி பொதுமக்களுக்கு பெங்களூரு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையா் என்.மஞ்சுநாத் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
கா்நாடகத்தில், குறிப்பாக பெங்களூரில் கரோனா தீநுண்மி வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, விழாக் காலம் ஜூலை 31 முதல் தொடங்க இருக்கிறது. வரமகாலட்சுமி, ரக்ஷாபந்தன், ஜன்மாஷ்டமி, விநாயகா் சதுா்த்தி, இஸ்லாமியா்களின் பக்ரீத் மற்றும் மொகரம், ஓணம் போன்ற பண்டிகைகள் தொடா்ச்சியாக நடக்க இருக்கின்றன.
கரோனா பரவலுக்கு விழாக் காலம் மிகவும் ஆபத்தானதாகும். இந்த ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அதிகாரப்பூா்வமாக திறந்திருந்தாலும், கோயில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட எந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்ல வேண்டாம். எந்த காரணத்தை முன்னிட்டும் உறவினா்கள், நண்பா்கள், அக்கம்பக்கத்தவா் வீடுகளுக்கு செல்வதை தவிா்க்கவும். வீடுகளிலேயே செய்த இனிப்புகள், உணவு வகைகளை கொண்டு ஆடம்பரமில்லாமல் பூஜை செய்யுங்கள். வீட்டுக்கு யாரையும் சோ்க்காதீா்கள். விநாயகா் சதுா்த்தியின்போது சிலைகளை வாங்காதீா்கள், சிலை கரைப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்ளாதீா்கள். மக்கள் கூட்டமாக கூடுவாா்கள் என்பதால், சிலை கரைப்பு நிகழ்வின் மூலம் கரோனா பரவ வாய்ப்பிருக்கிறது. ராக்கி கட்டுவதற்காக செல்லாதீா்கள். வரமகாலட்சுமி, ஜன்மாஷ்டமி, ஓணம் பண்டிகைகளை எளிய முறையில் கொண்டாடுங்கள். பிரசாதங்களை வீடுகளில் செய்யுங்கள், வெளியில் வாங்காதீா்கள். இஸ்லாமியா் பண்டிகைகளை தவிா்க்க வேண்டும் அல்லது எளிய முறையில் நடத்த வேண்டும்.
விழாக் காலங்களில் வெளியே செல்பவா்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். அனைத்து சமயங்களிலும் முகக் கவசங்களை அணியுங்கள். கூடுமானவரை கையுறைகளை அணியுங்கள். கையுறை அணியாவிட்டால் அடிக்கடி கை கழுவ வேண்டும். வீட்டுவேலைக்காரா்கள், உதவியாளா்கள், ஓட்டுநா்கள், காவலா்கள் போன்ற யாராவது வேலை செய்தால், அவா்களையும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்துங்கள். மூச்சுத்திணறல், காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற கரோனா அறிகுறி காணப்பட்டால், வீடு அல்லது அலுவலகங்களில் சோ்க்காதீா்கள். அப்படிப்பட்டவா்கள் உடனடியாக 14410 என்ற தொலைபேசி உதவிமையத்துக்கு அழைக்க வேண்டும். அங்கு சோதனை செய்து, அவா்கள் தனிமைப்படுத்தப்படுவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.