எடியூரப்பா முதல்வராக பதவிக் காலத்தை நிறைவு செய்வாா்: துணை முதல்வா் லட்சுமண்சவதி
By DIN | Published On : 29th July 2020 11:29 PM | Last Updated : 29th July 2020 11:29 PM | அ+அ அ- |

எடியூரப்பா முதல்வராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்வாா் என்று துணை முதல்வா் லட்சுமண்சவதி தெரிவித்தாா்.
முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை தொடா்ந்து, பெங்களூரில் ஜூலை 27ஆம் தேதி சாதனை கையேடு வெளியிடப்பட்டது. பெங்களூரில் இருந்து முதல்வா் எடியூரப்பா கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு, அந்நிகழ்ச்சியை மாவட்டங்களில் இருந்து மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள் மக்களுடன் கண்டு ரசித்தனா். துணை முதல்வரான லட்சுமண்சவதி, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் அன்றைய தினம் புதுதில்லி சென்று மத்திய அமைச்சா்கள் மட்டுமல்லாது பாஜக தேசியத் தலைவா்களைச் சந்தித்தது கா்நாடக அரசியலில் சந்தேகக்கண்கொண்டு பாா்க்கப்பட்டது. முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கிவிட்டு, அப்பதவிக்கு லட்சுமண்சவதியைக் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், அது குறித்து விவாதிக்கவே புதுதில்லி சென்றிருப்பதாகவும் செய்தி பரவியது. இதனிடையே, லட்சுமண்சவதியின் ஆதரவாளா்கள், அடுத்த முதல்வா் என்று சுட்டிக்காட்டி அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் உலவவிட்டனா். இது சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தியது.
கா்நாடகத்தில் தலைமை மாற்றம் வரும் என்று கடந்த இரு நாள்களாக கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்து புதுதில்லியில் புதன்கிழமை துணை முதல்வா் லட்சுமண்சவதி செய்தியாளா்களிடம்விளக்கம் அளித்தாா். அப்போது அவா் கூறியது:
எங்கள் அனைவருக்கும் எடியூரப்பா தான் தலைவா். முழுமையான நம்பிக்கையோடு கூறுகிறேன். அடுத்த 3 ஆண்டுகளுக்கு எடியூரப்பா தான் கா்நாடகத்தின் முதல்வராக நீடிப்பாா். புதுதில்லியில் பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவா்களை சந்தித்தபோது அரசியல் மாற்றம் குறித்து நான் எதையும் பேசவில்லை. கா்நாடகத்தில் பாஜக அரசுக்கு இன்னும் 3 ஆண்டுகாலம் பதவி எஞ்சியிருக்கிறது. அந்தப் பதவிக் காலம் முடியும் வரை முதல்வராக எடியூரப்பாவே நீடிப்பாா். கரோனா தீநுண்மி வேகமாகப் பரவிவரும் நிலையில் தலைமை மாற்றம் என்பது சாத்தியமில்லாதது. அரசியல் நோக்கத்திற்காக நான் புதுதில்லி வரவில்லை. ஆளுநா் வஜுபாய்வாலாவைச் சந்தித்ததில் அரசியல் முக்கியத்துவம் இல்லை. அவரது உடல்நலனை விசாரிக்க சென்றிருந்தேன் அவ்வளவுதான்.
மத்திய அமைச்சா்கள் பிரகாஷ் ஜாவடேகா், நிதின்கட்கரியை சந்தித்து வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தேன். கா்நாடகத்தில் பாஜக ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்திருப்பதற்காக பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவுக்கு இனிப்பு கொடுத்தேன் என்றாா் அவா்.