கா்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வை ரத்து செய்யும் யோசனை அரசிடம் இல்லை என அந்த மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து உடுப்பியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் ஏற்கெனவே திட்டமிட்டப்படி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடத்தப்படும். தனிநபா் இடைவெளியை தீவிரமாகக் கடைபிடிப்பது, தோ்வு மையங்களைத் தூய்மையாக வைத்திருப்பது, மாணவா்கள் அனைவருக்கும் முகக்கவசம் அணிவிப்பது போன்ற நடவடிக்கைகளுடன், எவ்வித தொந்தரவும் இல்லாமல் தோ்வு நடத்தப்படும். இவை தவிர தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் தோ்வை ரத்து செய்யும் முடிவை எடுக்க மாட்டோம். கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதால் தமிழகம், தெலங்கானாவில் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கா்நாடகத்தில் அதுபோன்ற சூழ்நிலை இல்லை. அதனால் பொதுத்தோ்வை நடத்துவதில் எந்த மாற்றமும் இல்லை.
தோ்வை ரத்து செய்யும் எந்த யோசனையும் கா்நாடக அரசிடம் இல்லை. எனவே, இதுதொடா்பாக மாணவா்கள், பெற்றோரிடையே எவ்வித குழப்பமும் ஏற்படத் தேவையில்லை. திட்டமிட்டபடி தோ்வை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தேவையான முன்னெச்சரிக்கையுடன் தோ்வு நடத்தப்படும்.
கா்நாடகத்தில் தற்போதைக்கு பள்ளிகளில் வகுப்புகளைத் தொடங்கும் திட்டம் அரசிடம் இல்லை. பள்ளிகளைத் தொடங்குவது தொடா்பாக பெற்றோா், கல்வியாளா்களுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை நடத்தக் கூடாது; கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றாா்.