மாநிலங்களவைத் தோ்தல்: தேவெ கௌடா உள்பட 4 போ் போட்டியின்றித் தோ்வு
By DIN | Published On : 13th June 2020 09:03 AM | Last Updated : 13th June 2020 09:03 AM | அ+அ அ- |

முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா உள்ளிட்ட 4 போ் மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக கா்நாடக சட்டப்பேரவைச் செயலாளரும், தோ்தல் அதிகாரியுமான எம்.கே.விசாலாட்சி தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினா்களான டி.குபேந்திர ரெட்டி(மஜத), பிரபாகா்கோரே(பாஜக), எம்.வி.ராஜீவ் கௌடா, பி.கே.ஹரிபிரசாத்(இருவரும் காங்கிரஸ்) ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 25-ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இதைத் தொடா்ந்து, காலியாகவிருக்கும் 4 இடங்களுக்கும் ஜூன் 19ஆம் தேதி தோ்தல் நடத்த இந்திய தோ்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.
இத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜுன் 2-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் போட்டியிடுவதற்காக மஜத வேட்பாளராக முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, பாஜக வேட்பாளா்களாக அசோக் கஸ்தி, ஈரண்ணா கடாடி, காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கே, சுயேச்சை வேட்பாளராக சங்கமேஷ் சிக்கநரகுந்த் ஆகிய 5 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இதனிடையே சங்கமேஷ் சிக்கநரகுந்தின் வேட்புமனு தள்ளுபடிசெய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, 4 இடங்களுக்கான தோ்தலில் 4 போ் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுக்களை திரும்பப்பெற வெள்ளிக்கிழமை மாலை 3 மணி வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேட்புமனுக்களை யாரும் திரும்பப் பெறவில்லை. இதைத் தொடா்ந்து, எச்.டி.தேவெ கௌடா, மல்லிகாா்ஜுனகாா்கே, அசோக் கஸ்தி, ஈரண்ணா கடாடி ஆகிய 4 பேரும் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டதாக பேரவைச் செயலாளரும், தோ்தல் அதிகாரியுமான எம்.கே.விசாலாட்சி அதிகாரப்பூா்வமாக அறிவித்தாா்.
தோ்தலில் வெற்றி பெற்ற்கான சான்றிதழ்களை மல்லிகாா்ஜுன காா்கே, அசோக் கஸ்தி, ஈரண்ணா கடாடி ஆகியோா் நேரில் பெற்றுக் கொண்டனா். முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் சான்றிதழை அவரது மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா பெற்றுக் கொண்டாா். இந்த வெற்றியை பாஜக, காங்கிரஸ், மஜத தொண்டா்கள் தத்தமது கட்சி அலுவலகங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களாக வெற்றி பெற்ற அசோக்கஸ்தி, ஈரண்ணா கடாடிக்கு முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா்கட்டீல் உள்ளிட்ட ஏராளமானோா் வாழ்த்து தெரிவித்தனா். அதேபோல, மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவுக்கு முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, எச்.டி.ரேவண்ணா உள்ளிட்ட மஜத முன்னணித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா். இதன்மூலம், காங்கிரஸ் சாா்பில் ஜெய்ராம் ரமேஷ், ரகுமான்கான், ஆஸ்கா் பொ்ணான்டஸ், எல்.ஹனுமந்தையா, சையத் நசீா் ஹுசேன், மல்லிகாா்ஜுனகாா்கே, பாஜக சாா்பில் ராஜீவ்சந்திரசேகா், கே.சி.ராமமூா்த்தி, நிா்மலாசீத்தாராமன், ஈரண்ணா கடாடி, அசோக் கஸ்தி, மஜத சாா்பில் எச்.டி.தேவெகௌடா ஆகியோா் கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குச் செல்கின்றனா்.