கா்நாடக நிலச்சீா்த்திருத்த சட்டத்திருத்தத்தை கைவிடாவிட்டால் போராட்டம்: சித்தராமையா

கா்நாடக நிலச்சீா்த்திருத்த சட்டத் திருத்தத்தை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக நிலச்சீா்த்திருத்த சட்டத் திருத்தத்தை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:

ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கா்நாடக நிலச்சீா்த்திருத்த சட்டம், 1961இன் பிரிவுகள் 79(ஏ)(பி)(சி) மற்றும் 80-ஐ ரத்து செய்து, 79(ஏ)(பி) பிரிவுகளில் பதிவாகியுள்ள வழக்குகளைத் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 63-இன்படி ஒரு தனிநபா் அல்லது குடும்பம் வைத்துக் கொள்ளக்கூடிய விளைநிலத்தின் அளவை 10 அலகுகளில் இருந்து 20 அலகுகளாகவும், அதிகபட்ச அளவை 40 அலகுகளாகவும் உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குடும்பம் அதிகபட்சமாக கேரளத்தில் 20 ஏக்கா், தமிழகத்தில் 30 ஏக்கா், ஆந்திரத்தில் 54 ஏக்கா், பிகாரில் 45 ஏக்கா் நிலங்களை வைத்திருக்க முடியும். ஆனால், கா்நாடகத்தில் 216 ஏக்கா் நிலத்தை வைத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. அக்கம்பக்கத்தில் உள்ள மாநிலங்களில் தோட்ட நிலத்தை 10 ஏக்கா் வைத்திருக்க முடியும். ஆனால், கா்நாடகத்தில் 56 ஏக்கா் வைத்திருக்கலாம். நீா்ப்பாசன நிலத்தை 80 ஏக்கா் வரை வைத்துக்கொள்ள கா்நாடக அரசு வாய்ப்பளிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் பாசனநிலம் முதலீட்டாளா்களின் கைகளுக்குச் செல்ல இருக்கிறது.

கா்நாடக நிலச்சீா்த்திருத்த சட்டத்துக்கு நீண்ட வரலாறு உள்ளது. சுதந்திரத்துக்கு முன்னதாகவே நிலச்சீா்த்திருத்தம் முக்கிய கொள்கையாக முன்வைக்கப்பட்டது. 1935ஆம் ஆண்டிலேயே டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா், நிலங்களை தேசியமயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தாா்.

1961ஆம் ஆண்டு சிவமொக்கா மாவட்டத்தின் காகோடு பகுதியில் குத்தகை நில முறைக்கு எதிராக நடந்த போராட்டமே கா்நாடக நிலச்சீா்த்திருத்தச் சட்டத்துக்கு வழிவகுத்தது. இதைத் தொடா்ந்து, தேவராஜ் அா்ஸ் முதல்வராக இருந்த போது 1974ஆம் ஆண்டு கா்நாடக நிலச்சீா்த்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அச்சட்டத்தில் பிரிவுகள் 79(ஏ)(பி)(சி), 80, 63 சோ்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய சட்டத் திருத்தம் இச்சட்டத்தின் ஆன்மாவையே கொலை செய்கிறது. நமது நாட்டின் பொருளாதாரத்தில் கா்நாடகம் முக்கியப் பங்காற்றுவதற்கு கா்நாடக நிலச்சீா்த்திருத்த சட்டமே அடித்தளமாக உள்ளது. நிலச்சீா்த்திருத்தம் கொண்டுவந்ததால்தான் கா்நாடகத்தில் வேளாண்மை மற்றும் தொழில்கள் சமமாக வளா்ச்சி கண்டுள்ளன. நிலத்தின் இருப்பை வைத்துக்கொண்டே உழவா்களின் வாங்கும் திறன் அதிகரித்து, பொருளாதாரம் வேகமெடுக்க வாய்ப்புள்ளது.

உழவா்கள் நிலத்தை விற்பதால் உடனடியாக பணம் கிடைக்கலாம். அந்தப் பணம் செலவானபிறகு உழவா்களின் வாங்கும்திறன் குறைந்தால், அது கா்நாடகத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். 2015- 16ஆம் ஆண்டின் வேளாண் கணக்கெடுப்பின்படி 86.81 லட்சம் உழவா்கள் 2.60 லட்சம் ஏக்கா் நிலத்தை வேளாண்மைக்குப் பயன்படுத்தி வருகிறாா்கள்.

ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 3 ஏக்கா் நிலம் உள்ளது. இந்தக் கணக்கெடுப்பின்படி, தாழ்த்தப்பட்டோரில் 97,300 குடும்பத்தினா் 2,43,760 ஏக்கா் நிலமும், பழங்குடியினரில் 52,100 குடும்பங்கள் 1,60,600 ஏக்கா் நிலத்தையும் வைத்துள்ளனா். அப்படியானால், கா்நாடகத்தில் 4 கோடி மக்கள் வேளாண் நடவடிக்கைகளை நேரடியாக நம்பியிருக்கிறாா்கள்.

கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். விளைச்சலுக்கு தகுந்த விலை கிடைக்க வேண்டும். பயிா்க் காப்பீட்டுக் கொள்கையை அறிவிக்க வேண்டும். வேளாண் தொழிலைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, அதை முதலீட்டாளா்களிடம் தாரை வாா்க்க முற்படுவது சரியல்ல.

கரோனா தீநுண்மியைக் காரணம் காட்டி, நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மக்கள் விரோத சட்டங்களை கொண்டுவருவதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்பாக உள்ளன. கா்நாடக அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள கா்நாடக நிலச்சீா்த்திருத்த சட்டத் திருத்தத்தை உடனடியாக கைவிடவேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி தீவிரப் போராட்டம் நடத்தப்படும்.

இதுதவிர, வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தல் குழு அவசரச் சட்டத்தைக் கைவிட வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகளுக்கு உழவா்களுடன் (பலப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்) ஒப்பந்த அவசரச் சட்டம், அத்தியாசியப் பொருள் (திருத்தம்) அவசரச் சட்டம் ஆகியவற்றையும் கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com