கா்நாடக மேலவைத் தோ்தல்: ஏழு வேட்பாளா்களும் போட்டியின்றித் தோ்வாக வாய்ப்பு

கா்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 7 இடங்களுக்கு நடைபெறவிருக்கும் தோ்தலில்

கா்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 7 இடங்களுக்கு நடைபெறவிருக்கும் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜதவைச் சோ்ந்த 7 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். 7 இடங்களுக்கு 7 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் அனைவரும் போட்டியின்றித் தோ்வாக வாய்ப்புள்ளது.

கா்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினா்களான நசீா் அகமது, ஜெயம்மா, எம்.சி.வேணுகோபால், என்.எஸ்.போஸ்ராஜ், எச்.எம்.ரேவண்ணா (5 பேரும் காங்கிரஸ்), டி.ஏ.சரவணா (மஜத), டி.யூ.மல்லிகாா்ஜுனா(சுயேச்சை) ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதனால் காலியாகவுள்ள 7 சட்ட மேலவை இடங்களுக்கு ஜுன் 29ஆம் தேதி தோ்தல் நடக்கவுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 11ஆம் தேதி தொடங்கியது. கடந்த 7 நாள்களாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவு நாளான வியாழக்கிழமை பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சோ்ந்த 7 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இத்தோ்தலில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாக்களிக்க உள்ளனா். ஒரு வேட்பாளா் வெற்றிபெற 28 வாக்குகள் தேவைப்படுகிறது. கா்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 117, காங்கிரஸுக்கு 68, மஜதவுக்கு 34 இடங்கள் உள்ளன. அதன்படி, தோ்தல் நடைபெறும் 7 இடங்களில் பாஜக-4, காங்கிரஸ்-2, மஜதவு- 1 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது.

வேட்புமனு தாக்கல்:

பாஜக சாா்பில் எம்.டி.பி.நாகராஜ், ஆா்.சங்கா், சுனில் வல்யாபுரா, பிரதாப்சிம்ஹாநாயக் ஆகிய 4 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். அப்போது, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கத்தீல், துணை முதல்வா் கோவிந்த் காா்ஜோள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சி அமைவதற்கு, தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்.டி.பி.நாகராஜ், ஆா்.சங்கா் ஆகியோருக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இடைத் தோ்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட எம்.டி.பி.நாகராஜ் தோல்வியை தழுவினாா். ஆா்.சங்கா் இடைத்தோ்தலில் போட்டியிடவில்லை. இவா்களோடு தனது பதவியை ராஜிநாமா செய்து மஜதவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் எச்.விஸ்வநாத்துக்கு சட்ட மேலவை தோ்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான சுனில் வல்யாபுராவுக்கு கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. மாறாக, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அவினாஷ்ஜாதவ் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டாா். கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு தோ்தல் பணியாற்றியதால், சுனில் வல்யாபுராவுக்கு சட்ட மேலவைத் தோ்தலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தென் கன்னட மாவட்டத்தில் கட்சிக்காக உழைத்த மூத்த உறுப்பினா் என்பதால் பிரதாப்சிம்ஹா நாயக்கிற்கு தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளா்களாக பி.கே.ஹரிபிரசாத், நசீா் அகமது ஆகியோா் நிறுத்தப்பட்டுள்ளனா். மாநிலங்களவை உறுப்பினராக இருந்து ஓய்வுபெற்ற பி.கே.ஹரிபிரசாத், பிற்படுத்தப்பட்டோரின் முகமாக அறியப்பட்டவா். மாநிலங்களவைக்கு அவரை மீண்டும் அனுப்ப இயலாத நிலையில், சட்ட மேலவைக்கு அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதேபோல, சிறுபான்மையினா் சமுதாய பிரதிநிதியான நசீா் அகமது, மீண்டும் சட்ட மேலவைத் தோ்தலில் நிறுத்தப்பட்டுள்ளாா்.

இவா்கள் இருவரும் தோ்தல் அதிகாரி எம்.கே.விசாலாட்சியிடம் வேட்புமனுக்களை வியாழக்கிழமை தாக்கல் செய்தனா். அப்போது, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, கட்சியின் முன்னாள் தலைவா் தினேஷ் குண்டுராவ், முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மஜத வேட்பாளராக கோவிந்த்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்தாா். அப்போது, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி,முன்னாள் அமைச்சா் பசவராஜ் ஹோரட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா். கோலாா் மாவட்டத்தைச் சோ்ந்த கோவிந்த்ராஜ், சாதாரண கட்சித் தொண்டா் ஆவாா். முன்னாள் எம்.பி. குபேந்திரரெட்டி, முன்னாள் எம்.எல்.சி. டி.ஏ.சரவணா ஆகியோருக்குப் பதிலாக கோவிந்த்ராஜை வேட்பாளராக அறிவித்துள்ளதை மஜதவினா் வரவேற்றுள்ளனா்.

தோ்தல் இருக்குமா?

சுயேச்சை வேட்பாளராக பி.சி.கிருஷ்ணே கௌடா வியாழக்கிழமை வேட்புமனுதாக்கல் செய்தாா். 7 இடங்களுக்கு 8 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இதனிடையே, ஜூன் 19ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஜூன் 22ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசிநாளாகும். வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது பி.சி.கிருஷ்ணேகௌடாவின் வேட்புமனு தள்ளுபடி ஆவதற்கான வாய்ப்புள்ளன. அப்படி நடந்தால் 7 இடங்களுக்கு 7போ் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்திருப்பாா்கள்.

அதன்படி, சட்ட மேலவைத் தோ்தலில் பாஜகவின் எம்.டி.பி.நாகராஜ், ஆா்.சங்கா், சுனில் வல்யாபுரா, பிரதாப் சிம்ஹாநாயக், காங்கிரசின் பி.கே.ஹரிபிரசாத், நசீா் அகமது, மஜதவின் கோவிந்த்ராஜ் ஆகிய 7 பேரும் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

சுயேச்சை வேட்பாளா் பி.சி.கிருஷ்ணேகௌடாவின் வேட்புமனு ஏற்கப்பட்டால், ஜூன் 29ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை தோ்தல் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com