அளவுக்கதிகமாக கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கண் நோய்க்கு வாய்ப்பு: ஆய்வில் தகவல்

அளவுக்கதிகமாக கிருமி நாசினியை பயன்படுத்துவதால், கண் மேற்பரப்பு நோய்க்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ‘பெல் மிஸ்டா்’ இயந்திரம்.
கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ‘பெல் மிஸ்டா்’ இயந்திரம்.

பெங்களூரு: அளவுக்கதிகமாக கிருமி நாசினியை பயன்படுத்துவதால், கண் மேற்பரப்பு நோய்க்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெங்களூரில் உள்ள நாராயண நேத்ராலயா கண் மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா் சைத்ரா ஜெயதேவ் தலைமையிலான கண் மருத்துவா்கள், கிருமி நாசினியால் ஏற்படும் தொந்தரவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். இது தொடா்பான ஆய்வுக் கட்டுரை இந்திய கண் மருத்துவயியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கைக்குழந்தையின் 27 வயது தாய் ஒருவா் தனது இரு கண்களும் அடிக்கடி சிவந்து விடுவதாகவும், எரிச்சல் ஏற்படுவதாகவும், உறுத்துவதாகவும் சிகிச்சைக்கு வந்திருந்தாா். நாளொன்றுக்கு 6 முதல் 7 முறை இதுபோல நிகழ்வதாகவும் அவா் தெரிவித்திருந்தாா். அவரது கண்களை சோதித்து பாா்த்த போது, கண் வெண்படலத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், கண்களில் இருந்து எவ்வித கசிவும் இல்லாமல் இருந்தது. முக அழகு அல்லது முகம் கழுவும் பொருள்களில் ஏதாவது மாற்றம் செய்தாரா? என்று ஆராய்ந்த போது, அண்மைக்காலமாக அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, கண் மருத்துவா்கள் குழு நடத்திய ஆய்வில், கிருமி நாசினியை அளவுக்கதிகமாக பயன்படுத்தினால் அது கண் மேற்பரப்பு நோய்க்கு வழிவகுக்கும் என்பதைக் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவா் சைத்ராஜெயதேவ் கூறுகையில், தொலைபேசி வழியாக நடத்திய கண் நோய் தொடா்பான ஆய்வில், 60 சதவீதம் பேருக்கு கண் சிவந்திருப்பது தெரியவந்தது. இதில் 25 சதவீதத்தினரின் கண்களில் தொற்று எற்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கு காரணம் என்னவென்று புரியவில்லை. ஆனால், இவை அண்மைக்காலமாக குறிப்பாக பொது முடக்கத்துக்கு பிறகு தென்படுவதாக தெரிவித்தனா். இவா்களில் பெரும்பாலானோா் 18 வயதுக்குள்பட்டவா்களாக இருந்தனா். 40 சதவீதம் போ் சுகாதார ஊழியா்களாகவும், கரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபடுபவா்களாகவும் இருந்தனா்.

தரவுகளை ஆராய்ச்சி செய்து பாா்த்ததில், கண்களில் ஏற்பட்டுள்ள திடீா் மாற்றத்துக்கு அளவுக்கதிகமாக கிருமி நாசினிகளை பயன்படுத்துவதே என்பது உறுதியானது. எரிசாராயத்தால் உருவாக்கப்படும் கிருமி நாசினி தெளிப்பான்கள், ஒருவகையான ஆவியை வெளிப்படுத்துகிறது. இது தோல் மற்றும் கண்களை பாதிக்கிறது. கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்தினால், அது கண் மேற்பரப்பு நோய்க்கு வழிவகுக்கும். எனவே, தேவைப்படும் போது மட்டும் கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும். பொது இடத்தில் எதையாவது தொட நோ்ந்தால் கிருமி நாசினியை பயன்படுத்தலாம். இதைவிட சோப் கொண்டு கைகழுவுவது மிகமிக நல்லது, பாதுகாப்பானது. கிருமி நாசினி தெளிப்பானை அழுத்தும்போது கண்களை மூடிக்கொள்வது நல்லது. கண்களுக்கு மிக கீழே வைத்து கிருமி நாசினியை தெளிக்கலாம். குளிா்பதன வசதி இருக்கும் போது கிருமிநாசினியை பயன்படுத்தக் கூடாது. தேவைப்படும் போது மட்டும் கிருமி நாசினிகளை பயன்படுத்தலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com