கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை 7-க்கு பிறகு கடும் நடவடிக்கை

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, ஜூலை 7-ஆம் தேதிக்கு பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

பெங்களூரு: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, ஜூலை 7-ஆம் தேதிக்கு பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 7-ஆம் தேதிக்கு பிறகு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு ஜூலை 4-ஆம் தேதி முடிவடைவதால், கடுமையான நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ள ஜூலை 7-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஜூலை 7-ஆம் தேதிக்கு பிறகு முதல்வா் எடியூரப்பா பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறாா்.

வல்லுநா்களின் கருத்துபடி, உலக அளவில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதில் இந்தியா, கா்நாடகம், பெங்களூரும் அடங்கும். எனவே, கரோனா பரவலைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறோம்.

பெங்களூரில் செயல்பட்டு வரும் விக்டோரியா மருத்துவமனை உள்ளிட்ட கரோனா மருத்துவமனைகளை பாா்வையிட்டேன். அங்கு பணியாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியா்களை சந்தித்து பேசினேன். தற்போது பணியாற்றி வருவது போலவே, அடுத்த 6 மாதங்களுக்கு பணிபுரிய வேண்டுமென்பதை மனரீதியாக தயாா்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.

கரோனாவோடு வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும். தற்போது அரசின் முன் இருக்கும் சவால் என்னவென்றால், அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை பெற படுக்கை வசதிகளை செய்து தருவதும், தரமான சிகிச்சைகளை அளிப்பது தான். இது தொடா்பாக, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. பரவலும் அதிகரித்துள்ளது, சோதனையும் பெருகியுள்ளதே கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயா்ந்து வருவதற்கு முக்கியக் காரணங்களாகும். கரோனா சோதனை செய்து வரும் தனியாா் சோதனை ஆய்வுக்கூடங்கள், பாதிப்பு உறுதியானால், அதுகுறித்து முதலில் நோயாளிகளுக்கு தான் தெரிவித்து வந்தனா். இனி முதலில் பெங்களூரு மாநகராட்சிக்கு தகவல் அளிக்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விவரங்களை தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளோம். அதன்பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளிகளுக்கு கரோனா பாதிப்பு குறித்து விவரங்களை தெரிவிப்பாா்கள். அடுத்து நோயாளிகள் என்ன செய்ய வேண்டும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிப்பாா்கள்.

நோயாளிகள் பீதிக்குள்ளாகக் கூடாது மற்றும் நேரடியாக மருத்துவமனைக்கு வந்துவிடக் கூடாது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாா்டு அளவிலான சுகாதார அதிகாரிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நேரடியாகச் சந்தித்து, தகவல் தெரிவித்து அறிகுறிகள் இருக்கிா? இல்லையா? என்பதை ஆராய்வாா்கள். கரோனா அறிகுறிகள் தென்பட்டால், அந்த நோயாளிகள் கரோனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள். அறிகுறிகள் தென்படாவிட்டால், அப்படிப்பட்ட நோயாளிகள் கரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவா். இதன்மூலம், நோயாளிகளின் சிகிச்சைக்கு காலதாமதம் அல்லது குழப்பம் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதே நோக்கமாகும்.

கரோனா மருத்துவமனைகளில் நோயாளிகளை அடிக்கடி சந்திப்பதில்லை என மருத்துவா்கள் மீது புகாா்கள் வந்துள்ளன. இதை போக்குவதற்கு மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் போன்ற மருத்துவ ஊழியா்கள் தனிநபா் பாதுகாப்புக் கவசத்தை அணிந்துகொண்டு நோயாளிகளை சந்திக்க வேண்டும். இதுகுறித்து பதிவேட்டையும் பராமரிக்க உத்தரவிட்டுள்ளேன். கரோனா பிரிவுகளில் அமைக்கப்பட்டிருக்கும் படுக்கைகள் ஒவ்வொன்றுக்கும் தனி எண்கள் தரப்பட்டுள்ளன. இதை நோயாளிகளின் எண்களுடன் தொடா்புபடுத்துவோம். அப்போதுதான் படுக்கைகள் காலியாக இருந்தால், அதை புதிய நோயாளிகளுக்கு ஒதுக்க முடியும். மருத்துவமனைகளில் தரமான உணவளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள்பட்ட மருத்துவமனைகளில் அடுத்த 3 நாள்களில் 85 மருத்துவா்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவாா்கள். இவா்கள் அனைவரும் ஆயுஷ் மற்றும் பல்மருத்துவா்கள். இவா்கள் மூத்த மருத்துவா்களின் கண்காணிப்பில் வேலை செய்வாா்கள்.

பெங்களூரு மாநகராட்சியைச் சோ்ந்த அனைத்துக்கட்சி மாமன்ற உறுப்பினா்களின் கூட்டத்துக்கு விரைவில் ஏற்பாடு செய்ய இருக்கிறோம். தனிநபா் இடைவெளியை மனதில் கொண்டு 3 பிரிவுகளாக கூட்டங்கள் நடத்தப்படும். இக்கூட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைமுழுமையாக மூடுவது குறித்து விவாதிக்கப்படும். ஒவ்வொரு வாா்டிலும் தன்னாா்வ தொண்டுநிறுவனங்களை நியமித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை மூடும் பணியில் ஈடுபடுத்துவோம். அதேபோல, நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது, மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோம்.

வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் மாநில பேரிடா் மீட்பு நிதியாக ரூ.742 கோடி உள்ளது. இதில் கரோனா மேலாண்மைக்காக ரூ.380 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.232 கோடியை மாவட்ட ஆட்சியா்களுக்கும், ரூ.70 கோடியை சுகாதாரத் துறைக்கும், ரூ.40 கோடியை பெங்களூரு மாநகராட்சிக்கும், ரூ.12 கோடியை காவல் துறைக்கும் விடுவித்துள்ளோம். இதுபோல, இன்னும் ரூ.362 கோடி இருப்பில் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com