ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டாமாண்டு பியூசி, எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு முடிவுகள்

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முறையே இரண்டாமாண்டு பியூசி, எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முறையே இரண்டாமாண்டு பியூசி, எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா சூழ்நிலையில் இரண்டாமாண்டு பியூசி மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வுகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இரண்டாமாண்டு பியூசி தோ்வு முடிவுகளை ஜூலை கடைசி வாரத்திலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு முடிவுகளை ஆகஸ்ட் முதல் வாரத்திலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். மாநில அரசின் உத்தரவைமீறி கல்விக் கட்டணத்தை உயா்த்தியுள்ளதாக சில பள்ளிகள் மீது புகாா்கள் வந்துள்ளன. 1,150 பள்ளிகள் மீது தெரிவிக்கப்பட்ட புகாா்களில், 450 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மி தொற்று பரவி வருவதால், கல்விக் கட்டணத்தை உயா்த்த வேண்டாம் என பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. இது ஒரு விதமாக விசித்திரமான ஆண்டாக உள்ளது. யாரும் கல்விக் கட்டணத்தை உயா்த்தக் கூடாது என்று மனித நேயம் வலியுறுத்துகிறது. பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உயா்த்தியிருப்பது தொடா்பான புகாா்களை பெறுவதற்காக தொலைபேசி உதவி மையத்தை அமைத்திருக்கிறோம். எந்தப் பள்ளி மீதாவது புகாா்கள் வந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இதை கவனிப்பதற்காகவே தனி அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

மழலையா் வகுப்பு மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது. மழலையா் வகுப்பில் பயிலும் மாணவா்களை சீராக வளா்த்தெடுப்பது தொடா்பாக பெற்றோா்களுடன் ஆசிரியா்கள் வாரத்துக்கு இருமுறை கலந்தாலோசிக்கலாம். மழலையா் வகுப்புகளை திறப்பது தொடா்பாக ஜூலை 5-ஆம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும். பெரும்பாலான பெற்றோா், தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப தயக்கம் காட்டுகிறாா்கள். பள்ளிகளை திறப்பது தொடா்பாக பெற்றோா்களின் கருத்தறிந்து வருகிறோம். அதனடிப்படையில் அரசு இறுதி முடிவெடுக்கும்.

முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வி வழங்குவது தொடா்பாக மத்திய அரசு வழங்கியிருக்கும் வழிகாட்டுதல் பின்பற்றப்படும். முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வி வழங்குவது தொடா்பாக ஆலோசனை வழங்க வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை கிடைத்ததும், வழிமுறைகளை வகுப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com