பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்துபெங்களூரில் காங்கிரஸ் கட்சியினா் மிதிவண்டிப் பேரணி

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் மிதிவண்டிப் பேரணி நடத்தினா்.

பெங்களூரு: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் மிதிவண்டிப் பேரணி நடத்தினா்.

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதைக் கண்டித்து, பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மிதிவண்டிப் பேரணி நடத்தினா்.

பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்டன மிதிவண்டிப் பேரணியில், காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கே, செயல் தலைவா்கள் ஈஸ்வா்கண்ட்ரே, சலீம் அகமது, எம்.பி. பி.கே.ஹரிபிரசாத் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, பெங்களூரில் உள்ள தத்தமது வீடுகளில் இருந்து மிதிவண்டியில் குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு அவா்கள் வந்தனா். டி.கே.சிவக்குமாா், சித்தராமையா உள்ளிட்ட தலைவா்கள் மிதிவண்டியில் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தபோது, ஏராளமான தொண்டா்கள் பின்தொடா்ந்தனா்.

காங்கிரஸ் அலுவலகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டா்கள் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கிருந்து மாட்டு வண்டியில் இரு சக்கர வாகனத்தை ஏற்றிக்கொண்டு வருமான வரித் துறை அலுவலகம் வரை கண்டன மிதிவண்டிப் பேரணி நடத்தினா்.

போராட்டத்தின் போது, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியதாவது:

அனைத்துப் பொருள்களின் மீதான விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பெட்ரோல், டீசலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 75-க்கும் அதிகமாக உயா்ந்திருக்கவில்லை. எரிபொருள்களின் விலை மட்டுமல்ல, அத்தியாவசியப் பொருள்களின் விலையும் தற்போது கூடியுள்ளது. இதனால் சாதாரண மக்களின் வாழ்க்கை அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 40 டாலராக சரிந்துள்ள நிலையில், பெட்ரோல் விலை ரூ. 25-ஆக இருக்க வேண்டும். கடந்த 2 வாரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 11 வரை உயா்ந்துள்ளது. இதை மக்கள் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? ஏழைகள், நடுத்தர மக்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை என்றாா்.

தனிநபா் இடைவெளி:

காங்கிரஸ் போராட்டத்தின்போது, கரோனா தீநுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற பலா் முகக் கவசங்களை அணிந்திருக்கவில்லை. தனிநபா் இடைவெளியை சிறிதும் கடைப்பிடிக்கப்படவில்லை. மேலும், 50 போ் ஒரு இடத்தில் ஒன்றுசேரக் கூடாது என்ற விதிமுறை இருந்தாலும், ஆயிரக்கணக்கானோா் போராட்டத்தில் கலந்துகொண்டனா். இதனால் குயின்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கிக்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com