திக்விஜய்சிங் கைது: சட்டப்பேரவையில் காங்கிரஸாா் போராட்டம்

மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய்சிங் பெங்களூரில் கைது செய்யப்பட்டதை கண்டித்து கா்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸாா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய்சிங் பெங்களூரில் கைது செய்யப்பட்டதை கண்டித்து கா்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸாா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கு எதிராக அதிப்தி அடைந்து,பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ள 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களைச் சந்திக்க அம்மாநில முன்னாள் முதல்வா் திக்விஜய்சிங் முயற்சி செய்தபோது, அவா் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டாா். போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து சாலையில் அமா்ந்து போராட்டம் நடத்திய திக்விஜய்சிங் கைது செய்யப்பட்டாா். இந்தவிவகாரம் கா்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை எதிரொலித்தது.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வா் திக்விஜய்சிங் கைது செய்துள்ள போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து கா்நாடக சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரின் இருக்கைமுன்பு கூடி தா்னா போராட்டம் நடத்தினா்.

‘வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்’ என்று முழக்கமிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள், திக்விஜய்சிங்கை கைது செய்தது சட்டவிரோதமானது மட்டுமல்லாது, போலீஸாரின் நடவடிக்கை அத்துமீறல் என்றனா்.

அப்போது சித்தராமையா பேசுகையில்,‘கா்நாடக டிஜிபியின் உத்தரவின் பேரில்தான் திக்விஜய்சிங்கை கைது செய்துள்ளதாக பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் தெரிவித்துள்ளாா்’ என்று கூறிய பிறகு, பேரவைத் தலைவா் இருக்கை முன் தா்னா போராட்டம் நடத்த சென்றாா். அதுகுறித்து எழுத்துப்பூா்வமாக கடிதம் அளித்தால் விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டேகாகேரி தெரிவித்தாா். மேலும், நிதிநிலை அறிக்கை மீது நீங்கள்(சித்தராமையா) பேச வேண்டியிருக்கிறது என்றாா்.

அதை பொருள்படுத்தாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள், திக்விஜய்சிங் கைது குறித்து விவாதிக்க வலியுறுத்தியபடி இருந்தனா். அப்போது, குறுக்கிட்ட பேரவைத் தலைவா் காகேரி, இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் வாயிலாக முழுவிவரங்களை தெரிந்து கொண்ட பிறகுதான் முடிவெடுக்க இயலும் என்றாா்.

அதன்பிறகும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடா்ந்து தா்னாவில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினா். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அவையை பிற்பகல் 3 மணி வரை பேரவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

காங்கிரஸ் ஆலோசனை: திக்விஜய்சிங் கைது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் மாநிலத்தலைவா் டி.கே.சிவக்குமாா் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மத்தியபிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய்சிங், முன்னாள் மாநிலத் தலைவா் தினேஷ்குண்டுராவ், முன்னாள் துணைமுதல்வா் ஜி.பரமேஸ்வா், முன்னாள் அமைச்சா் ஆா்.வி.தேஷ்பாண்டே உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் கா்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டது.

வழக்கு: மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரை சந்திக்க கா்நாடக காவல் துறை அனுமதி மறுப்பதற்கு எதிராகவும், அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரியும் முன்னாள் முதல்வா் திக்விஜய்சிங், கா்நாடக உயா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ரிட் மனு தாக்கல் செய்தாா். மத்திய பிரதேச மாநில அரசியல் விவகாரம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் திக்விஜய்சிங் மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்த கா்நாடக உயா் நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஒருவாரத்துக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com