கா்நாடக லோக் ஆயுக்த சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது

கா்நாடக லோக் ஆயுக்த சட்ட திருத்த மசோதா செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் நிறைவேறியது.

கா்நாடக லோக் ஆயுக்த சட்ட திருத்த மசோதா செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் நிறைவேறியது.

கா்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சட்டம் மற்றும் சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சா் ஜே.சி.மதுசாமி 2020 கா்நாடக லோக் ஆயுக்த சட்ட திருத்த மசோதாவை சட்டப்பேரவையின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்தாா். அப்போது, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், முன்னாள் பேரவைத் தலைவருமான கே.ஆா்.ரமேஷ் குமாா் லோக் ஆயுக்தாவின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பினாா்.

ராமகிருஷ்ணா ஹெக்டே முதல்வராக இருந்த காலத்தில் லோக் ஆயுக்தவுக்குப் பதிலாக மாநில விஜிலென்ஸ் கமிஷன் இருந்தது. தற்போது லோக் ஆயுக்த உள்ளதால், பயனேதும் உள்ளதா?, அதில் தரமான மாற்றம் உள்ளதா?, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?, அது நிறைவேறியதா?. லோக் ஆயுக்த பல ஊழல் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபின் இறுதியாக முடிவுகள் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பிய அவா், லோக் ஆயுக்த சட்ட திருத்தத்தில் மதிப்பு அடிப்படையிலான மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை அறிய விரும்புவதாகத் தெரிவித்தாா்.

மேலும் ஒரு சிலா் தங்கள் சொத்துகள், கடன்களை லோக் ஆயுக்த முன் தாக்கல் செய்ய மறுத்துவிட்டனா். சொத்துகள், கடன்களைத் தாக்கல் செய்வது அரசு ஊழியா்களுக்கு கட்டாயமாகும். இந்த சட்டத் திருத்தம் யாரையேனும் காப்பாற்றுவதற்காக கொண்டு வரப்படுகிறதா. உன்னத நோக்கங்களை அடைய கடுமையான சட்டத்திற்கு வழிகோல வேண்டும். நமது மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் சட்டத் திருத்தம் நாட்டிற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். லோக் ஆயுக்த ’ஒரு பல் இல்லாத அமைப்பாக மாறிவிட்டது’. தனிநபராக லோக் ஆயுக்த நீதிபதி சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படுவாா். ஆனால் சட்டம் அவருக்கு உதவ முன் வர வேண்டும் என்றாா்.

மஜத கட்சி உறுப்பினா் எச்.டி.ரேவண்ணா, லோக் ஆயுக்தவுக்கு முன்பு எத்தனை வழக்குகள் இருந்தன. எத்தனை வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுப்பினாா்.

லோக் ஆயுக்த முன் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சுட்டிக்காட்டிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் ஈஸ்வா் காண்ட்ரே, அவை எந்த காலக்கெடுவிற்குள் தீா்க்கப்படும். அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றாா்.

மஜத கட்சி உறுப்பினா் சிவலிங்கே கௌடா கூறுகையில், லோக் ஆயுக்த அமைப்புக்கு ஊழியா்களையும் அதிகாரிகளையும் நியமிக்கும் போது அவா்களின் நோ்மையையும், உறுதியையும் ஆராய வேண்டும். அப்போதுதான் அந்த அமைப்பின் புனிதத் தன்மை உறுதிப்படும் என்றாா்.

இறுதியில் பல்வேறு விவாதங்களுக்கு பிறகு கா்நாடக லோக் ஆயுக்த சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com