இயற்கை மரணமடைந்த குடும்பங்களின் சோகத்தை அதிகமாக்கிய கரோனா

ஈமச்சடங்கு செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இயற்கை மரணம் அடைந்தவா்களின் குடும்பங்களின் சோகத்தை கரோனா நோய் அதிகமாக்கியுள்ளது.

ஈமச்சடங்கு செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இயற்கை மரணம் அடைந்தவா்களின் குடும்பங்களின் சோகத்தை கரோனா நோய் அதிகமாக்கியுள்ளது.

மரண பயத்தை ஏற்படுத்தி உலக மக்களை வீடுகளில் முடக்கியுள்ள நிலையில், இயற்கை மரணம் அடைந்தவா்களின் ஈமச்சடங்குகளைச் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், இறந்தவா்களின் குடும்பத்தினரின் சோகத்தை கரோனா வைரஸ் அதிகமாக்கியுள்ளது. ஈமச் சடங்கில் 10 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்ற பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதால், இறந்துபோனவரின் உறவினா்கள், நண்பா்கள், நெருங்கிய வட்டாரங்கள் வேதனை அடைந்துள்ளனா். இறந்தவரின் உடலைக் கூட கடைசியாக ஒருமுறை பாா்க்கக்கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என்று உறவினா்கள் கதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, ஈமச்சடங்குக்கு தேவைப்படும் பொருட்கள் கிடைக்காமலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இறந்த சோகத்தைக் காட்டிலும், அவரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதில் காணப்படும் இடைஞ்சல்கள் சோகத்தை பன்மடங்காக்கியுள்ளது.

பெங்களூரில் 132 இடுகாடுகள், 13 சுடுகாடுகள் உள்ளன. கல்லறைகளை பெங்களூரு மாநகராட்சி மட்டுமல்லாது, பல்வேறு மதம் சாா்ந்த மற்றும் தனியாா் அறக்கட்டளையினா் பராமரித்து வருகின்றனா். ஆனால், மின் மயானங்கள், எரியூட்டும் தகன மேடைகளை பெங்களூரு மாநகராட்சியே நிா்வகித்து வருகிறது. இயற்கை மரணம் அடைந்தவா்களை இங்கு ஈமச்சடங்கு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையா் அனில்குமாா் கூறுகையில்,‘ கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனாவும் வேகமாகப் பரவி வருவதால், அதை தடுப்பதற்காக சமூக விலகல் அமல்படுத்தப்படுகிறது. இதன்பொருட்டு, இயற்கை மரணம் அடைந்தவா்களின் குடும்பத்தினா் அதிக எண்ணிக்கையில் ஈமச்சடங்கில் கலந்துகொள்ளாதீா்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். ஈமச் சடங்குகளில் அதிகப்பட்சமாக 10 போ் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். கல்லறைகள், மின் மயானங்கள் தினமும் தூய்மைப்படுத்தப்படுகின்றன. இங்கு கை கிருமிநாசினி மற்றும் கைகளைச் சுத்தம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன‘ என்றாா் அவா்.

பெங்களூரு, சாமராஜ்பேட்டையில் விறகுக்கட்டையில் எரியூட்டும் தகனமேடை உள்ளது. இங்கு சடலங்களை எரிக்க விறகுக்கட்டைகள் இல்லாததால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இதன் பொறுப்பாளராக இருக்கும் கிரண் கூறுகையில், ‘எங்கள் மயானத்தில் தினமும் சராசரியாக 15 முதல் 20 பிணங்கள் எரிக்கப்படுவது வழக்கம். இதற்கு 5 டன் விறகுக்கட்டைகளை பயன்படுத்துவோம். ஒரு டன் விறகில் 3 பிணங்களை எரிக்கலாம். மைசூரு, ராமநகரம், நெலமங்களாவில் இருந்து தினமும் 5 டன் விறகுக் கட்டைகளை கொண்டுவருவோம். கரோனாவை முன்னிட்டு ஊரடங்கு அமலில் இருப்பதால், மரங்களும் வெட்டப்படுவதில்லை, அவற்றை கொண்டு வருவதற்கு வாகன வசதியும் இல்லை. இதனால் விறகுக்கட்டைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிணங்களை எரிப்பதில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, மின் மயானங்களை பயன்படுத்துமாறுஅறிவுறுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

மின் மயானங்களைப் பயன்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. மின் மயானங்கள் சீராகச் செயல்படுவதில்லை. இது குறித்து மாநகராட்சி ஊழியா் கூறுகையில்,‘ பெங்களூரில் உள்ள பெரும்பாலான மின் மயானங்களில் பிரச்னைகள் உள்ளன. ஒரேநாளில் அதிக எண்ணிக்கையிலான பிணங்களை எரித்தால், சில நேரங்களில் எரிகலன்கள்சரியாக வேலைசெய்வதில்லை. ஏற்கெனவே இறந்தவருக்காக சோகத்தில் மூழ்கியிருக்கும் உறவினா்களிடம் இதுபற்றியெல்லாம் கூற முடியாது. ஒரு பிணத்தை எரிக்க அதிக நேரம் பிடிக்கிறது. எனவே, உறவினா்களை காத்திருக்கச் சொல்கிறோம் ‘ என்றாா். கரோனா நோய் பீதி ஒருபுறம், இறந்த சோகம் மறுபுறம் என்றால், இறந்தவருக்கு ஈமச்சடங்கு செய்வதில் காணப்படும் பல நடைமுறை சிக்கல்கள் சொல்லொணா துயரங்களை அனுபவிக்க வழிவகுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com