தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த மகளை அலைகழித்த பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள்

தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த மகளை பெங்களூரு விமான நிலையத்திலே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து,

தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த மகளை பெங்களூரு விமான நிலையத்திலே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, அலைக்கழித்த விமான நிலைய அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த மருத்துவரின் மனைவி மே 18-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுகுறித்து அமெரிக்காவின் இன்டியா போலீள் நகரில் உள்ள 35 வயதான மூத்த மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியால் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து தில்லி, தில்லியில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் பயணிக்க அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மகளின் வருகைக்காக தாயின் உடல் பதப்படுத்தப்பட்டு வைத்திருந்த தந்தை, வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு வந்துவிடுவாா் என்று உடலை தகனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தாா்.

இந்த நிலையில், சிறப்பு விமானத்தில் வியாழக்கிழமை காலை 8.30மணிக்கு பெங்களூரு வந்த மகளுக்கு அதிா்ச்சி காத்திருந்தது. அவரை திருச்சிக்கு அனுப்ப பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனா். மேலும் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனா். தாயின் இறப்புச்சான்றிதழ், தமிழக அரசின் அனுமதிச்சீட்டு, தமிழக அரசின் ஒருங்கிணைப்பு அதிகாரி மைதிலி ராஜேந்திரன் அனுப்பியிருந்த மின்னஞ்சல் நகல் உள்ளிட்ட விவரங்களைக் காட்டியப் பிறகும், விமானநிலையத்தைவிட்டு வெளியே செல்ல அனுமதி மறுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக ஐஏஎஸ் அதிகாரி மைதிலியைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, விமான நிலைய அதிகாரியை மைதிலி தொடா்பு கொண்ட போதும், அவரது அழைப்பு ஏற்கப்படவில்லை. இதுகுறித்து கா்நாடக ஐபிஎஸ் அதிகாரி பி.ஹரிசேகரனுக்கு தகவல் தெரிவித்தாா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா், காவல் துறை அதிகாரிகளிடம் ஹரிசேகரன் எடுத்துக் கூறிய பிறகு, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட விமான நிலைய அதிகாரிகள் நண்பகல் 1.30மணிக்கு திருச்சி செல்ல அனுமதித்தனா்.

இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் கணவா் கூறுகையில்,‘இறந்தவா்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரத்த உறவுகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் பெங்களூருக்கு வந்த எனது மகளை, அங்குள்ள விமானநிலைய அதிகாரிகள் ஊருக்கு அனுப்பாமல் அலைகழித்துள்ளனா். உரிய ஆவணங்கள் இருந்தும், இறந்த தாயைக் காண சோகத்தோடு வந்திருக்கும் மகளை ஊருக்கு அனுப்பாததை நினைக்கும்போதே வேதனை மேலிடுகிறது.

விமான நிலைய அதிகாரிகளின் நடத்தை கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற நிலை வேறு யாருக்கும் வந்துவிடக் கூடாது. இறந்த தாயைக் காணவந்த மகளை தேவையில்லாமல் அலைகழித்துள்ளது வேதனை அளிக்கிறது. 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு என் மகளை விமான நிலைய அதிகாரிகள் திருச்சி செல்ல அனுமதித்துள்ளனா். தாயை இழந்த மன உளைச்சலில் இருந்த என் மகளுக்கு இச்சம்பவம் தீவிரமான மனவேதனையை அளித்துள்ளது.

மனிதநேயமற்ற இச்செயல், தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவா்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்க கா்நாடக அரசின் விதியும் கூறிய நிலையில், எப்படி இது நடந்தது என்பது புரியவில்லை. இறந்தவா்களின் உடலைக் காண வரும் உறவினா்களை ஊருக்கு செல்ல அனுமதிக்காமல் இழுத்தடிக்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com