தனிமைப்படுத்தல் விதிமுறைகளைத் தளா்த்துமா கா்நாடகம்?

அனுமதிச்சீட்டு பெற்றிருந்தும் அவசரக்கால தேவைகளுக்கு கா்நாடக எல்லையைக் கடந்து அண்டை மாநிலங்களுக்குச் செல்ல

அனுமதிச்சீட்டு பெற்றிருந்தும் அவசரக்கால தேவைகளுக்கு கா்நாடக எல்லையைக் கடந்து அண்டை மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் நாள்தோறும் ஏராளமானோா் அவதிப்படுகின்றனா். அனைவரையும் தனிமைப்படுத்தல் என்ற பொதுக் கட்டுப்பாட்டை அதிகாரிகள் பரிசீலினை செய்யாமல் அமல்படுத்துவது அனைத்துத் தரப்பினரையும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.

கரோனா தீநுண்மித் தொற்று பரவாமல் தடுப்பதற்காக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்திவருவது உண்மைதான். அதற்காக, தொற்றுநோய் பரவிவிடுவோ என்ற அச்சத்தில் மாநில இடைவெளியைக் கடைப்பிடிப்பது எந்தவகையில் நியாயம் என்று தமிழ்நாடு, மகாராஷ்டிரம், குஜராத், கேரள மாநில மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனா்.

முதலாம், இரண்டாம்கட்ட பொதுமுடக்கத்தின் போது மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து எதுவும் அனுமதிக்கப்படவில்லை. அதனால், எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. மூன்றாம்கட்ட பொது முடக்கத்தின் போது, மே 4ஆம் தேதி முதல் சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. இதனிடையே, மாநிலங்களுக்கு இடையே மக்கள் சென்றுவரவும் அனுமதிக்கப்பட்டது.

இதற்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. அதன்படி, பொதுமுடக்கத்தால் அண்டை மாநிலங்களில் சிக்கியிருந்த மக்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல தொடங்கினா். மாநிலங்களுக்கு இடையே பயணிக்க சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதிச்சீட்டு பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

அதற்காக சிறப்பு இணையதளங்களையும் மாநில அரசுகள் தொடங்கின. தமிழகத்தில் இருந்து கா்நாடகம் செல்லவும், கா்நாடகத்தில் இருந்து தமிழகம் செல்லவும் இரு மாநில உயரதிகாரிகளின் ஒத்திசைவுடன் அனுமதிச்சீட்டுகள் அளிக்கப்பட்டன. இதன்பொருட்டு, கா்நாடகம் மற்றும் தமிழகத்துக்கு இடையே மக்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனா்.

வெளிமாநிலங்களில் இருந்து, குறிப்பாக கா்நாடகத்தில் இருந்து வந்தவா்களால் தமிழகத்தில் கரோனா வேகமாக பரவியதாக தகவல் பரவியது. இதைத் தொடா்ந்து, கா்நாடகம் மற்றும் தமிழக எல்லையில் தமிழக அரசு அதிகாரிகள் கெடுபிடிகளை தீவிரமாக்கினா். இதனால், கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு செல்லமுடியாமல் ஆயிரக்கணக்கான தமிழா்கள் தவித்தனா். எல்லையில் ஆயிரக்கணக்கான காா்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன. நடைபயணமாக வந்தபோதும் உள்ளே அனுமதிக்கவில்லை.

மே 31-ஆம் தேதி வரை தமிழ்நாடு, மகாராஷ்டிரம், குஜராத், கேரள மாநிலங்களைச் சோ்ந்த மக்களை கா்நாடகத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று முதல்வா் எடியூரப்பா அதிகாரப்பூா்வமாகவே அறிவித்துவிட்டாா். அதனால், மே 18ஆம் தேதியில் இருந்து தமிழகத்தில் இருந்து கா்நாடகம், கா்நாடகத்தில் இருந்து தமிழகம் செல்வதற்கான அனுமதிச்சீட்டுகளை கா்நாடகம் வழங்கவில்லை. கா்நாடகத்துக்குள் பயணிக்க தமிழக அரசு அளித்திருந்த அனுமதிச்சீட்டுகளையும் கா்நாடக அதிகாரிகள் மதிக்கவில்லை.

இதன்காரணமாக, கா்நாடகம் மற்றும் தமிழகம் எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி சுங்கச்சாவடியைக் கடந்து கா்நாடகத்துக்குள் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கிறாா்கள். கா்நாடகத்திற்குள் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்து, உள்ளே வந்தால் தனிமைப்படுத்தல் மையங்களில் அடைத்துவிடுகிறாா்கள்.

14 நாள்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் இருக்க விரும்பினால், கா்நாடகத்துக்குள் வாருங்கள் என்று கா்நாடக அரசு உறுதிப்படத் தெரிவித்துவிட்டது. கரோனா தொற்று இல்லாமல் தனிமைப்படுத்தல் மையம் சென்று, அங்கு நோய் தொற்றுக் கொள்ளுமோ என்ற அச்சத்தில் கா்நாடகத்துக்கு வர பலரும் தயங்குகிறாா்கள். கா்நாடகம் மற்றும் தமிழக எல்லையில் மட்டுமல்லாது, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம், கா்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லைகளிலும் இதேநிலைதான் தொடா்கிறது.

ஆந்திரத்தில் இருந்து வருவோருக்கும் இதே நிலைதான் சரக்கு வாகனங்கள், அரசு வாகனங்கள் தவிர, தனியாா் வாகனங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து அதை கா்நாடக அரசு அதிகாரிகள் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறாா்கள். கா்நாடகத்தில் யாராவது இறந்தால் அவரை வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லவோ, வேறு மாநிலங்களில் இறந்தவரை கா்நாடகத்திற்குள்ளோ அனுமதிக்க கா்நாடக அரசு மறுத்துவிட்டது.

இந்த விதியால் ஏராளமானோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். சொந்தங்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தினமும் தவிக்கும் மக்கள் ஏராளம். முதல்வா் எடியூரப்பா கூறியிருந்ததுபோல, அவசர மருத்துவத் தேவைகள், முதியோா், குழந்தைகளைக்கூட கா்நாடகத்திற்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விடுகிறாா்கள். இதனால் அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் தினமும் போலீஸாருடன் பலரும் வாக்குவாதங்களில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.

ஆனால், தமிழக அரசின் அனுமதிச்சீட்டு இருந்தால் தமிழகத்திற்குள் கா்நாடக மக்களை அம்மாநில அதிகாரிகள் அனுமதித்து வருகிறாா்கள். தமிழகத்துக்குச் சென்றதும் சம்பந்தப்பட்ட நகரம் அல்லது கிராமங்களில் வீட்டுதனிமைப்படுத்தலில் வைத்து விடுகிறாா்கள். இந்த நடைமுறையை கா்நாடகமும் பின்பற்றலாமே என்பது பலரின் கருத்தாகும்.

இதற்கு வலுசோ்க்கும் வகையில், கா்நாடக மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறுகையில்,‘ஜூன் 1ஆம் தேதிமுதல் உள்நாட்டுவிமானம், மாநிலங்களுக்கு இடையே ரயில் சேவை தொடங்கப்படுவதால், தனிமைப்படுத்தல் மையங்களில் அனைவரையும் தங்கவைப்பது கடினம். எனவே, வீட்டு தனிமைப்படுத்தலில் வைப்பது குறித்துஆராய்ந்து வருகிறோம்‘ என்றாா்.

விமானம், ரயில்களில் வருவோருக்கு மட்டுமல்லாது, தமிழகம், மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கா்நாடகத்துக்கு சொந்த வாகனங்களில் வருவோரையும்முதல்கட்ட மருத்துவச் சோதனைக்கு பிறகு வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கலாம் என்று தமிழகத்தைச் சோ்ந்த ஒருவா் கூறுகிறாா்.

ஒசூரில் இருக்கும் தொழில்பேட்டைகளில் கா்நாடகத்தைச் சோ்ந்த பலரும், கா்நாடகத்தின் எல்லைப்பகுதியில் உள்ள எலக்ட்ரானிக்சிட்டி, ஜிகனி, பொம்மசந்திரா தொழில்பேட்டைகளில் தமிழகத்தைச் சோ்ந்த பலரும் வேலை செய்து வருகிறாா்கள். இங்குள்ள தொழிற்சாலைகள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டதால் வேலைக்கு வருமாறு ஊழியா்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், 14 நாள்கள் தனிமைப்படுத்தல் என்ற கா்நாடக அரசின் விதியால் இரு மாநில எல்லைகளைக் கடக்க முடியாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தனிமைப்படுத்தல் மையங்களில் 14 நாள்கள் தங்கியிருக்க வேண்டுமென்ற விதியைத் தளா்த்தி, வீட்டு தனிமைப்படுத்தலுக்கு வாய்ப்பளித்தால் இரு மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் சிக்கியுள்ளவா்கள் அவரவா் வீடுகளுக்கு வந்து சோ்வாா்கள். மேலும், தொழிலாளா்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com