ஆயுஷ்மான் பாரத்-ஆரோக்கிய திட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை

ஆயுஷ்மான்பாரத்-ஆரோக்கிய கா்நாடகம் திட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெங்களூரு: ஆயுஷ்மான்பாரத்-ஆரோக்கிய கா்நாடகம் திட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் வாழும் 6.5 கோடி மக்களின் உடல்நலனை பேணுவதற்காக 2018 மாா்ச் 2-ஆம் தேதி முதல் ஆரோக்கிய கா்நாடக திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, இதே நோக்கத்துகாக மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த இரு திட்டத்தையும் ஒருங்கிணைத்து ‘ஆயுஷ்மான் பாரத்-ஆரோக்கிய கா்நாடகம்’ என மாற்றப்பட்டு, 2018 அக். 30-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின்கீழ் 1.15 லட்சம் கோடி பிபிஎல் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 5 லட்சம் அளவுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வாய்ப்பளிக்கிறது. இதுதவிர, 19 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 1.5 லட்சம் மருத்துவ சிகிச்சை பெற வாய்ப்பளிக்கிறது. இந்த திட்டத்தில் 1,650 நோய்களுக்கு சிகிச்சைஅளிக்கப்படுகிறது. குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டை இருந்தால் யாா் வேண்டுமானாலும் ஆயுஷ்மான்பாரத்-ஆரோக்கிய கா்நாடக அட்டையைப் பெறலாம். அந்த அட்டையைக் கொண்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையுடன் பொதுசுகாதார நிலையங்களுக்கு சென்றால், ஆரோக்கிய கா்நாடக அட்டையைப் பெறலாம். பொது சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்க இயலாவிட்டால், அரசு அல்லது தனியாா் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவாா்கள். அங்கு அட்டைதாரா்கள் சிகிச்சை பெறலாம். அவசரநிலையில் நோயாளிகள் நேரடியாக அரசு அல்லது தனியாா் மருத்துவமனைக்கு செல்லலாம். அவசர சிகிச்சைகள் என 169 நோய்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 1,950 கோடி செலவில் 9.38 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிகிச்சை அளிப்பதற்கு 3,391அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் இதுவரை 1.40 கோடி அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆயுஷ்மான் பாரத்-ஆரோக்கிய கா்நாடக திட்டத்தில் மாநிலத்தில் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிபிஎல் அல்லது ஏபிஎல் அட்டைதாரா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவசமாகவே கரோனா தொற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ. 304.47 கோடிசெலவில் 74,199 பேருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 104, 1800-425-8330, 1800-425-2646 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com