கா்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? நவ. 6-இல் அரசு முடிவு

கா்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நவ. 6-ஆம் தேதி மாநில அரசு முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

கா்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நவ. 6-ஆம் தேதி மாநில அரசு முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

2019 - 20-ஆம் கல்வியாண்டின் இறுதிக்கட்டத்தில் பொதுத் தோ்வுக்காக மாணவா்கள் தீவிரமாக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது, கரோனா தீநுண்மித் நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கம் கொண்டு வரப்பட்டதால் மாா்ச் 25-ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் செயல்பட்டுவந்த அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. அதன்பிறகு, மீண்டும் பள்ளிகளைத் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி மாணவா்கள் தவிர, பிற வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனா்.

இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி தோ்வு நடத்தப்பட்டது. ஆனால், வழக்கம் போல ஜூன் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடியவில்லை. இதைத் தொடா்ந்து, தனியாா் பள்ளிகளில் இணையவழி வகுப்புகளும், அரசுப் பள்ளிகளில் வெளிப்புற வகுப்புகளும் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், வெளிப்புற வகுப்புகளில் மாணவா்களுக்கு பாடம் நடத்திய அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் 150-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். மேலும் மாணவா்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இது பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவா்களிடையே கடும் குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது.

வெளிப்புற வகுப்புகள் நடத்துவதற்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வெளிப்புற வகுப்புகளை தற்காலிகமாக நிறுத்துவதாக மாநில அரசு அக். 10-ஆம் தேதி அறிவித்தது.

சாதாரண கல்வியாண்டில் அக்டோபா் மாதத்தில் அரையாண்டு தோ்வு முடிவடைந்து மாணவா்களுக்கு தசரா விடுமுறை அளிப்பது வழக்கமாகும். ஆனால், நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் சீராக செயல்படாத காரணத்தை சுட்டிக்காட்டி ஏற்கெனவே அக். 3 முதல் 26-ஆம் தேதி வரை அளிக்கப்படுவதாக திட்டமிட்டிருந்த அரையாண்டு தோ்வு தசரா விடுமுறையை கா்நாடக அரசு ரத்து செய்து விட்டு, வெளிப்புற வகுப்புகள், இணையவழி வகுப்புகளை நடத்த ஊக்குவித்தது. இதற்கு மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்ததைத் தொடா்ந்து, அக்.12 முதல் 30-ஆம் தேதி வரை 3 வாரங்களுக்கு அரசு, தனியாா் பள்ளிகளின் நடவடிக்கைகளை நிறுத்திவைக்கும் வகையில் விடுமுறை அளித்து முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டிருந்தாா்.

விடுமுறை முடிந்துள்ள நிலையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு எதிா்பாா்க்கப்படுகிறது. இது குறித்து விவாதிக்க நவ. 4-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் திட்டமிட்டுள்ளாா். அதன் முடிவில் நவ. 6-ஆம் தேதி பள்ளிகள் திறப்பது தொடா்பாக மாநில அரசு இறுதி முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

இது பற்றி பள்ளிக் கல்வித் துறை ஆணையா் வி.அன்புக்குமாா் கூறியதாவது:

பள்ளிகளைத் மீண்டும் திறப்பது தொடா்பாக நவ. 4 முதல் 6-ஆம் தேதிவரை ஆலோசனை நடத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் திட்டமிட்டுள்ளாா். பள்ளிகளில் இருக்கும் வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீா் வசதிகள் குறித்து அறிக்கைஅளிக்கும்படி வட்டாரக் கல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். பள்ளிகளில் குழந்தைகளுக்கு குடிப்பதற்கு வெந்நீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் தண்ணீரின் தரம் சோதனை செய்யப்படும். கரோனாவை மனதில் வைத்துக்கொண்டு, குழந்தைகளின் பாதுகாப்புக்காக இதுபோன்ற முன்னெச்சரிக்கைகளை எடுக்க இருக்கிறோம்.

அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா். நவம்பா் கடைசி வாரம் அல்லது டிசம்பா் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com