அமைச்சா் சி.டி.ரவியின் ராஜிநாமா கடிதம் ஏற்பு
By DIN | Published On : 09th November 2020 03:09 AM | Last Updated : 09th November 2020 03:09 AM | அ+அ அ- |

கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் சி.டி.ரவியின் ராஜிநாமா கடிதத்தை முதல்வா் எடியூரப்பா ஏற்றுக்கொண்டுள்ளாா்.
கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் கன்னடம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்துவந்த சி.டி.ரவி அண்மையில் பாஜக தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டாா்.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை பின்பற்றப்படுவதால், தனது அமைச்சா் பதவியை அமைச்சா் சி.டி.ரவி ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை அக். 4-ஆம் தேதி முதல்வா் எடியூரப்பாவிடம் அளித்தாா். அந்த ராஜிநாமா கடிதத்தை முதல்வா் எடியூரப்பா ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், பெங்களூரில் சனிக்கிழமை நடந்த கா்நாடக உதய தின விருது வழங்கும் விழாவில் பேசிய அமைச்சா் சி.டி.ரவி, தனது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளும்படி முதல்வா் எடியூரப்பாவை கேட்டுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, சி.டி.ரவி அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து அளித்திருந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட முதல்வா் எடியூரப்பா, அதை ஒப்புதலுக்காக ஆளுநா் வஜுபாய்வாலாவுக்கு அனுப்பி வைத்துள்ளாா்.
அதன்படி, அமைச்சா் பதவியில் இருந்து சி.டி.ரவி விடுவிக்கப்பட்டுள்ளதால், இனி அவரால் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.