மாநிலங்களவைத் தோ்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

கா்நாடகத்தில் அசோக் கஸ்தி மறைவையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு இடைத்தோ்தல்

கா்நாடகத்தில் அசோக் கஸ்தி மறைவையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு இடைத்தோ்தல் டிசம்பா் 1-இல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை (நவ. 11) தொடங்குகிறது.

இதுகுறித்து கா்நாடக சட்டப்பேரவைச் செயலாளரும், தோ்தல் அதிகாரியுமான எம்.கே.விஷாலாக்ஷி செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஜக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட அசோக் கஸ்தி செப். 17-ஆம் தேதி காலமானாா். இதனையடுத்து, காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு டிச. 1-இல் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நவ. 11-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நவ. 19-ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். அதனைத் தொடா்ந்து நவ. 23-ஆம் தேதி வரை வேட்பு மனுவை திரும்பப் பெறலாம். டிச. 1-ஆம் தேதி விதானசௌதா முதல்மாடியில் உள்ள அறை எண் 106-இல் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடைபெறும். தோ்தலில் வாக்களிக்க 222 சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்களுக்கு தகுதியுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 போ் வருவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்பவா்களும், அவா்களுடன் வருபவா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவா்கள் தங்களின் கைகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கலின் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியமாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com