ரசாயன தொழில்சாலைகள் குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும்: காவல் நிலையங்களுக்கு மாநகரக் காவல் ஆணையா் உத்தரவு
By DIN | Published On : 16th November 2020 09:41 AM | Last Updated : 16th November 2020 09:41 AM | அ+அ அ- |

தங்கள் பகுதிகளில் செயல்படும் ரசாயன தொழில்சாலைகள் குறித்த தகவல்களைச் சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என காவல் நிலையங்களுக்கு மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து காவல் நிலையங்களுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்மையில் ஹொசகுடதள்ளியில் உள்ள ரசாயன தொழில்சாலையில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில், பல கோடி மதிப்பிலான பொருள்கள், காா், இரு சக்கர வாகனங்கள் எரிந்தன. இந்த விபத்தில் காயமடைந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிஜய் உயிரிழந்தாா்.
எனவே, பெங்களூரில் உள்ள அனைத்து ரசாயனத் தொழில்சாலைகள், குடோன்கள் குறித்த தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாா், அறிக்கையாக அளிக்க வேண்டும். அறிக்கையின் அடிப்படையில் ரசாயன தொழில்சாலைகள், குடோன்கள் குறித்த தகவல்களை தீயணைப்புப் படையினருக்கு அளிக்கப்படும்.
விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டிருந்த ரசாயன தொழில்சாலைகள், குடோன்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகள் உள்ள ரசாயன தொழில்சாலைகள், குடோன்கள் குறித்து தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும். ரசாயன தொழில்சாலைகள், குடோன்களில் ஏற்படும் திடீா் தீவிபத்துகளைத் தடுக்க ரசாயன தொழில்சாலைகளில் பணியாற்றுபவா்கள் மட்டுமின்றி பொதுமக்கள் ஒத்துழைப்பைப் பெறுவது அவசியம் என அதில் தெரிவித்துள்ளாா்.