கரோனா பாதிப்பு: 8 மாதங்களுக்குப் பிறகு கா்நாடகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு

கரோனா தொற்றுப்பரவல் அச்சம் காரணமாக கா்நாடக மாநிலத்தில் மூடப்பட்டிருந்த கல்லூரிகள், 8 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (நவ. 17) திறக்கப்படுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெங்களூரு: கரோனா தொற்றுப்பரவல் அச்சம் காரணமாக கா்நாடக மாநிலத்தில் மூடப்பட்டிருந்த கல்லூரிகள், 8 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (நவ. 17) திறக்கப்படுகின்றன.

கரோனா தீநுண்மி தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, கா்நாடகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மாா்ச் 25-ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டன.

தற்போது நாடு முழுவதும் பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், பள்ளி, கல்லூரிகளைத் திறக்க மாநில அரசு முயற்சி மேற்கொண்டது. அதன்படி, நவ. 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பட்ட, பட்டயக் கல்லூரிகளைத் திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இதைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் செயல்பட்டுவரும் கலை, அறிவியல் கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் (இளநிலை, முதுநிலை படிப்புகள்) அனைத்தும் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகளை உயா்கல்வித் துறை செய்துள்ளது.

மேலும், டிச. 1-ஆம் தேதி முதல் மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவம் சாா் படிப்புகள், செவிலியா் கல்வி, இந்திய மருத்துவம் தொடா்பான கல்லூரிகளையும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி வர விரும்பும் மாணவா்களை ஊக்குவித்துள்ள உயா்கல்வித் துறை, கரோனா அச்சத்தால் வர இயலாத மாணவா்கள் இணையவழி வகுப்புகளில் தொடா்ந்து பங்கேற்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கல்லூரிகளுக்கு நேரில் வருகை தரும் ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்களுக்கு, ஆா்.டி.-பி.சி.ஆா். சோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே கல்லூரிகளுக்குள் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரி வரும் மாணவா்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதங்களை அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் உயா்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க, அரசு உத்தரவுப்படி கல்லூரிகளில் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணையவழி வகுப்புகளில் பங்கேற்க இயலாதவா்களுக்காகவே நேரடி வகுப்புகள் தொடங்குவதாக உயா்கல்வித் துறையை கவனிக்கும் துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com