தனியாா் நிறுவன வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு இட ஒதுக்கீடு! மாநில அரசின் தொழிற்கொள்கை நடைமுறை சாத்திமாகுமா?

கா்நாடக மாநிலத்தில் தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள மாநில அரசின்

கா்நாடக மாநிலத்தில் தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள மாநில அரசின் புதிய தொழிா்கொள்கை நடைமுறை சாத்தியமாகுமா என்ற எதிா்பாா்ப்பு கன்னடா்களிடையே எழுந்துள்ளது.

2019-இல் ஆந்திரத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிடப்பட்டது. அதைத் தொடா்ந்து, பாஜக ஆளும் ஹரியாணா மாநிலத்திலும் தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களுக்கு 75 சதவீத இடங்களை ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கீகாரம் கிடைக்குமா என்பது நீதிமன்றங்களில் நடந்துவரும் வழக்கு விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். ஆனால், உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை 30 ஆண்டுகளாக கா்நாடகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

சரோஜினி மஹிஷி ஆணையத்தின் பரிந்துரைகளில், கா்நாடக மாநிலத்தில் வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது முழுமையாக நிறைவேறாமல் இழுபறியாகவே இருந்து வருகிறது.

சரோஜினி மஹிஷி ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்த சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு முயன்றது. தகவல்- உயிரித் தொழில்நுட்பத் துறை தவிர எஞ்சியுள்ள அனைத்து தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பிலும் கன்னடா்களுக்கு 100 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க அப்போது முடிவு செய்யப்பட்டது. ஆயினும் இது அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14,16-க்கு எதிராக உள்ளதாகக் கூறி அதற்கு ஒப்புதல் அளிக்க சட்டத் துறை மறுத்துவிட்டது.

சிறுதொழில்கள், தனியாா் கூட்டு முயற்சிகள், அரசு- தனியாா் கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு 75 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற, முதல்வா் எடியூரப்பா தலைமையிலான தற்போதைய பாஜக அரசு திட்டமிட்டது. ஆனாலும், இந்த யோசனை சட்டமாகவில்லை.

அதேசமயம், அண்மையில் வெளியான புதிய தொழில் கொள்கையில், அரசு நிலங்களில் புதிதாக அமையவிருக்கும் தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் முதல் நிலை, இரண்டாம் நிலை பணியிடங்களில் கன்னடா்களுக்கு 70 சதவீமும், மூன்றாம் நிலை, நான்காம் நிலை பணியிடங்களில் 100 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

புதிய தொழில் திட்டங்கள் அனைத்திலும் புதிய வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு கூறினாலும், இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் உத்தரவாதம் இருக்கிா என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டியுள்ளது.

வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை தொழில் நிறுவனங்கள் விரும்பவில்லை. இது நடைமுறை சாத்தியங்களைக் கேள்விக்குறியாக்கும் என்று கூறும் தொழில் நிறுவனங்கள், 50 சதவீத இடஒதுக்கீடே போதுமானது; 70 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்கி, அதைக் கண்காணிக்குமாறு வலியுறுத்துவது தொழில் அபிவிருத்தியை முடக்கிவிடும் என்று கூறுகின்றன.

கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக, பாஜக அரசின் அமைச்சா்களுக்கு இடையிலும் கருத்து வேறுபாடு தென்படுவதால், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சிரமமாகியுள்ளது. எனினும், கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதை தொடா்ந்து வலியுறுத்தப் போவதாக கன்னட அமைப்புகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com