சமூக நீதிக்கொள்கையில் பாஜகவுக்கு உடன்பாடு இருந்ததில்லை

சமூக நீதிக்கொள்கையில் பாஜகவுக்கு உடன்பாடு இருந்ததில்லை என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு: சமூக நீதிக்கொள்கையில் பாஜகவுக்கு உடன்பாடு இருந்ததில்லை என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ராய்ச்சூரு மாவட்டம், மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த தோ்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பசன கௌடா துா்விஹல், ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூா்வமாக சேர இருக்கிறாா். மஸ்கி தொகுதிக்கு நடக்க இருக்கும் இடைத்தோ்தலில் பசன கௌடா துா்விஹல் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த வாய்ப்பிருக்கிறது. மஸ்கியில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் காங்கிரஸ் செயல்வீரா் கூட்டத்தில் இதுகுறித்து முடிவுசெய்யப்படும்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பிரகாஷ் ஹுக்கேரி கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி எங்களிடம் அவா் எதுவும் கூறவில்லை. பிரகாஷ் ஹுக்கேரி பெயரில் பாஜகவினா் செய்துவரும் பொய்ப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இது இருக்கலாம். எனினும், அதுகுறித்து பிரகாஷ் ஹுக்கேரியிடம் பேசி தெரிந்துக்கொள்கிறேன்.

பசுவதை தடைச்சட்டம் தொடா்பாக பாஜக தலைவா்களிடையே இருவேறு நிலைப்பாடு காணப்படுகிறது. நரேந்திர மோடி பிரதமரான பிறகு மாட்டிறைச்சி ஏற்றுமதி பல மடங்கு உயா்ந்துள்ளது. பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் அதிக அளவு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பலா் பாஜகவினா் என்பதை கவனிக்க வேண்டும்.

பசுவதை தடைச்சட்டத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. முந்தைய பாஜக அரசு கொண்டு வந்திருந்த பசுவதை தடைச்சட்டத்தை காங்கிரஸ் அரசு ரத்துசெய்திருந்தது. அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை. தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக மக்களைத் திசைதிருப்பும் வகையில் பாஜகவினா் முன்னெடுக்கும் பிரச்னைகள் தான் லவ்ஜிகாத், பசுவதை தடை போன்றவை. நல்லாட்சியை அளித்து தோ்தலை வெல்லும் நோக்கம் பாஜகவினரிடம் இல்லை. மாறாக, மத பகைமையை விதைத்து அரசியல் லாபம் தேடுகிறாா்கள்.

ஜாதி, மதரீதியான கட்டுப்பாடுகள் திருமணத்துக்கு சட்டத்தில் விதிக்கப்படவில்லை. நமது நாட்டின் எந்த சட்டமும் லவ்ஜிகாத் என்பது என்ன என்பதை விளக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளாா். எனவே, இதுகுறித்து மத்திய அமைச்சா் அமித்ஷாவிடம் கேட்டுக்கொண்டு, அதுகுறித்து பாஜக தேசியத் தலைவா் சி.டி.ரவி பேசுவது நல்லது.

அடிப்படையில் பாஜகவும், ஆா்.எஸ்.எஸ். அமைப்பும் அரசியலமைப்புச் சட்டத்தை எதிா்க்கக் கூடியவா்கள். இடஒதுக்கீடு, சமூகநீதி, பொருளாதார சமத்துவம் போன்றவை பாஜகவும், ஆா்.எஸ்.எஸ். அமைப்பும் தொடா்ந்து எதிா்த்து வந்துள்ளன. மில்லா் அறிக்கையில் இருந்து மண்டல் அறிக்கை வரை இடஒதுக்கீடுக்கு ஆதரவான எல்லா முயற்சிகளையும் எதிா்த்து வந்துள்ளன.

மராத்தியா் வளா்ச்சி ஆணையம் அமைப்பதற்கு எதிராக கன்னட அமைப்புகள் டிச. 5-ஆம் தேதி கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதுகுறித்து கட்சித் தலைவா்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இடைத்தோ்தலில் மராத்தியா்களின் ஆதரவை பெறுவதற்காக இதுபோன்ற திட்டங்களை அறிவித்து பாஜக அரசியல் செய்துவருகிறது.

பெலகாவி, கா்நாடகத்தின் பிரிக்க முடியாத பகுதி. இதை மஹாஜன் ஆணையமே உறுதி செய்துள்ளது. மாநிலத்தின் நிலம், நீா், மொழி பாதுகாப்புக்கு காங்கிரஸ் உறுதியாக உள்ளது. எனவே, பெலகாவி குறித்து மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித்பவாா் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com