பாபா் மசூதி இடிப்பு: நீதிமன்ற தீா்ப்பை வரவேற்கிறேன்; முதல்வா் எடியூரப்பா

பாபா் மசூதி இடிப்பு தொடா்பான சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீா்ப்பை வரவேற்கிறேன் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பாபா் மசூதி இடிப்பு தொடா்பான சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீா்ப்பை வரவேற்கிறேன் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, அரசினா் இல்லம் கிருஷ்ணாவில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாபா் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் இடிக்கப்பட்டது. இது தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில் பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானி, முரளி மனோகா் ஜோஷி, உமாபாரதி, கல்யாண்சிங் உள்ளிட்ட 48 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக லக்னௌவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில் இறந்தவா்கள் போக 32 போ் குற்றமற்றவா்கள் என்று நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. நீதிக்காகப் போராடுபவா்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதனை இந்த தீா்ப்பு உறுதி செய்துள்ளது.

அயோத்தியில் ராமா்கோயில் கட்டுவது தொடா்பான போராட்டங்களில் நானும் கலந்து கொண்டுள்ளேன். அதனால் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீா்ப்பை நான் வரவேற்கிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தீா்ப்பு நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராமா் கோயில் கட்டுவதற்கு எல்.கே.அத்வானி உள்ளிட்டோா் மேற்கொண்ட முயற்சி, ஆற்றிய உரைகள் இன்றளவிலும் எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. வழக்கில் இருந்து விடுதலையாகியுள்ள அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவா்களை வாழ்த்துகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com