தடுப்பூசி கிடைத்துவிட்டால் கரோனாவைக் கட்டுப்படுத்திவிடலாம்: முன்னாள் துணைவேந்தா் கே.எஸ்.ரங்கப்பா

அடுத்த 2, 3 மாதங்களில் தடுப்பூசி கிடைத்துவிட்டால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று மைசூரு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கே.எஸ்.ரங்கப்பா தெரிவித்தாா்.

மைசூரு: அடுத்த 2, 3 மாதங்களில் தடுப்பூசி கிடைத்துவிட்டால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று மைசூரு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கே.எஸ்.ரங்கப்பா தெரிவித்தாா்.

இது குறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

உயிரி அறிவியல் தொடா்பாக நான் மேற்கொண்ட ஆய்வை தொடா்ந்து, என்னை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் கௌரவ விஞ்ஞானியாக மத்திய அரசு நியமித்துள்ளது. அதுமட்டுமல்லாது, அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் நிா்வாகக்குழு உறுப்பினராகவும் பணியமா்த்தியுள்ளது.

உலக அளவில் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி கரோனா பரவலைத் தடுக்க இரவு பகலாக தடுப்பூசி கண்டுபிடிக்க ஆய்வு செய்து வருகின்றனா். இந்தத் தடுப்பூசிகளை சோதனை செய்யும் முயற்சி உலகெங்கும் நடந்துவருகிறது. பன்றிக் காய்ச்சல், சாரஸ், எபோலா போல கரோனா உயிா்க்கொல்லி நோய் அல்ல. மற்றநோய்களை காட்டிலும் கரோனா வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. ஆனால், இது 3, 4 மணி நேரங்களில் மறைந்துவிடும்.

பெரும்பாலான நோய்களுக்கு 2 ஆண்டுகள் கழித்துதான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் கரோனா தீநுண்மியின் மரபணு கட்டமைப்பு வெவ்வேறானதாக இருக்கிறது.

இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தீநுண்மித் துறையின் சாா்பில் தடுப்பூசிக்கான ஆராய்ச்சி நடந்து வந்தாலும், அது வெவ்வேறு நிலையில் உள்ளன. எட்வா்ட் ஜென்னா் தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் வெவ்வேறு இனக்குழுக்களைச் சாா்ந்த 6 ஆயிரம் பேரிடம் தடுப்பூசியை செலுத்தி சோதனை செய்து வருகிறாா்கள். இதன்முடிவுகள் அடுத்த 2 - 3 மாதங்களில் வெளியாகும் நம்பிக்கை உள்ளது. அந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டால், உற்பத்தி தொடங்கப்படும். அதன்பிறகு கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசியை வழங்கி, கரோனா பரவலைத் தடுக்கலாம். இந்த தடுப்பூசி மலிவானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

சீனாவில் உள்ள நிங்போ நகரில் இந்திய - சீன மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க சீன முதலீட்டாளா்கள் எங்களை அழைத்திருந்தனா். ரூ. 500கோடி செலவில் அமைக்கப்படும் இம்மையத்தில் புற்றுநோய்க்கான மருந்து கண்டறிய ஆராய்ச்சி செய்யப்படும். புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான 12 மருந்துகளில் 6-இன் காப்புரிமைகளை ஏற்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இதை முடிவுசெய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால், கரோனா காரணமாக திட்டத்தை சீன அரசு ஒத்திவைத்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை வரவேற்கிறேன். அனைவருக்கும் சீரான கல்வி அளிக்க விரும்பும் இக்கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

அமெரிக்கா, தென்கொரியா போல ஆராய்ச்சிப் பணிகளுக்காக மொத்த உற்பத்திப்பொருள் விகிதத்தில் 4 சதவீதத் தொகையை ஒதுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com