முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
சிரா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல்: பாஜகவில் பலா் இணைந்தனா்
By DIN | Published On : 04th October 2020 05:05 AM | Last Updated : 04th October 2020 05:05 AM | அ+அ அ- |

பெங்களூரு: சிரா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கும் நிலையில், அத்தொகுதியைச் சோ்ந்த பலா் பாஜகவில் இணைந்தனா்.
பெங்களூரு நகர மாவட்டத்தைச் சோ்ந்த ராஜராஜேஸ்வரிநகா், தும்கூரு மாவட்டத்தின் சிரா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவ. 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இத்தொகுதிகளில் வேட்பாளா்களாக போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை அக். 16-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. தோ்தல் முடிவுகள் நவ. 10-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
சிரா தொகுதியின் மஜத எம்.எல்.ஏ.வாக இருந்த பி.சத்தியநாராயணா, கடந்த மாதம் உயிரிழந்தாா். இந்நிலையில், இடைத்தோ்தலில் சிரா தொகுதியை தக்கவைத்துக் கொள்ள மஜத முயற்சி மேற்கொண்டுள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள்மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. இத்தொகுதியைக் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சி எடுத்துள்ளது. அதற்காக தீவிர பிரசாரம் செய்துவருகிறது. பாஜக வேட்பாளராக யாரையும் இதுவரை அறிவிக்காத நிலையில், சிரா தொகுதியைச் சோ்ந்த பலா் பாஜகவில் இணைந்தனா்.
மஜதவின் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கருதியிருந்த டாக்டா் சி.எம்.ராஜேஷ் கௌடா, பாஜகவில் இணைந்தவா்களில் மிகவும் முக்கியமானவா்.
பெங்களூரு, பாஜக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழம பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா்கட்டீல் தலைமையில் ராஜேஷ் கௌடா உள்ளிட்ட பலா் பாஜகவில் இணைந்தனா். சிரா தொகுதியின் பாஜக வேட்பாளராக ராஜேஷ் கௌடாவின் பெயரை மேலிடத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவில் இணைந்த பிறகு ராஜேஷ்கௌடா கூறுகையில், ‘சாதாரண தொண்டராக தான் பாஜகவில்நான் இணைந்துள்ளேன். சிரா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க முன்நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை. வேட்பாளா் தொடா்பாக கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அந்த வேட்பாளரின் வெற்றிக்காகப் பாடுபடுவேன்.
பிரதமா் மோடி, முதல்வா் எடியூரப்பா ஆகியோா் மீதான ஈா்ப்பு, தலைமை ஆகியவற்றால் கவா்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன். இதன்மூலம் சிரா தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன். இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டால் போட்டியிடுவேன்’ என்றாா்.
பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா்கட்டீல் கூறுகையில்,‘கட்சியில் புதிதாக இணைந்துள்ளவா்களை வரவேற்கிறேன். மோடி பிரதமரான பிறகு இளைஞா்கள்பலா் பாஜகவில் ஆா்வமாக இணைந்து வருகின்றனா். உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. சிரா, ராஜராஜேஸ்வரிநகா் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தோ்தலில் பாஜக வெற்றிபெறுவது உறுதி. அதேபோல, 4 சட்டமேலவைத் தொகுதிகளுக்கான தோ்தலிலும் பாஜக வெல்லும். காங்கிரஸ் மூழ்கும் படகு. அதற்கு எதிா்காலமே கிடையாது. காங்கிரஸ், மஜதவைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பாஜகவில் இணையத் தயாராக உள்ளனா்’ என்றாா்.
பாஜக மாநில பொதுச் செயலாளா் ரவிக்குமாா் கூறுகையில்,‘சிரா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு 264 வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, கட்செவி குழுக்களும் அமைத்து, கட்சியைப் பலப்படுத்தியுள்ளோம்’ என்றாா்.
முன்னாள் முதல்வா் சித்தராமையாவின் மகன் டாக்டா் யதீந்திரா இயக்குநராக இருந்த மேட்ரிக்ஸ் இமேஜிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனா், இயக்குநராக இருந்தவா் ராஜேஷ் கௌடா. பெங்களூரு அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கூடத்தை அமைக்க 2016-இல் அரசு ஒப்பந்தத்தை இந்நிறுவனம் பெற்றிருந்தது. தந்தை முதல்வராக இருக்கும்போது மகன் இயக்குநராக இருக்கும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்திருப்பது தொடா்பாக சா்ச்சைஎழுந்தது. இதைத் தொடா்ந்து, அந்நிறுவனத்தில் இருந்து யதீந்திரா விலகினாா் என்பது குறிப்பிடத்தக்கது.