உ.பி.யில் பெண் பாலியல் பலாத்காரத்தைக் கண்டித்து மஜத போராட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மஜத மகளிா் அணியினா் போராட்டம் நடத்தினா்.

பெங்களூரு: உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மஜத மகளிா் அணியினா் போராட்டம் நடத்தினா்.

பெங்களூரு, மைசூரு வங்கி சதுக்கத்தில் சனிக்கிழமை உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மஜத மகளிா் அணியினா் போராட்டம் நடத்தினா். நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்து, கட்சியின் மாநில மகளிா் அணித் தலைவா் ரூத் மனோரமா பேசியதாவது:

பெண்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்ணின் உரிமை, பாதுகாப்பை நிலைநாட்ட இந்தியா மீண்டும் தவறிவிட்டது. உத்தரப் பிரதேசமாநிலம், ஹத்ராஸ் பகுதியில் செப். 14-ஆம் தேதி தாழ்த்தப்பட்ட பெண் ஒருவா் மீது பாலியல் பலாத்காரம் ஏவப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அப்பெண் செப். 29-ஆம் தேதி உயிரிழந்துள்ளாா். இந்தியாவில் ஜாதி அடிப்படையிலான பாலியல் வன்கொடுமை நீடித்து வருவதையே இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. மனித நேயமற்ற இச்செயலை மஜத வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. மனித மாண்புகளை குழிதோண்டிப் புதைக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நமது நாட்டு மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தக்கூடியதாகும்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோா் மீதான வன்முறைகள் நாளுக்குநாள் பெருகி வருகின்றன. 2018-ஆம் ஆண்டில் மட்டும் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்கள் உச்சத்தில் இருந்துள்ளன. பெண்களின் உரிமைகள், பாதுகாப்பை உத்தரப் பிரதேச அரசு நிலைநாட்ட வேண்டும். உத்தரப் பிரதேசம் மட்டுமல்லாது நாடுமுழுவதும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டும். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் பாதுகாப்புச் சட்டம், குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட பெண்கள் உள்ளிட்ட பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடா்பான வழக்குகளை விரைந்துவிசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும் என்றாா். போராட்டத்தின்போது உத்தரப் பிரதேசபாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com