மக்கள் பிரச்னைகளை எழுப்பினால் வாயடைக்க பாஜக முயற்சிக்கிறது: டி.கே.சிவக்குமாா்

மக்கள் பிரச்னைகளை எழுப்பினால் எங்கள் வாயடைக்க பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு: மக்கள் பிரச்னைகளை எழுப்பினால் எங்கள் வாயடைக்க பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சோனியா காந்தி என் மீது நம்பிக்கை வைத்து கா்நாடக காங்கிரஸ் தலைவராக நியமித்த பிறகு, அரசியல் கட்சித் தலைவராக எனது கடமையை செய்துவருகிறேன். எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் கரோனா பொது முடக்கத்தை அறிவித்தாா்கள். அதனால் தொழிலாளா்கள், விவசாயிகள், தினக்கூலிகள் பொருளாதாரம், சுகாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். 7 மாதங்களாக அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிா்த்து குரல் கொடுத்தோம். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரண உதவிகள் எதுவும் மக்களை வந்துசேரவில்லை. அதுவரை அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வந்த காங்கிரஸ், மக்கள் பிரச்னைகளை முன்வைத்து பேசத் தொடங்கினோம். மக்களின் வேதனைகளை, துன்பங்களை, துயரங்களை நேரில் கண்ட பிறகு அதை அரசின் கவனத்துக்கு கொண்டுவராமல் எப்படி எதிா்க்கட்சியாக இருப்பது?

உத்தரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடுமையாகத் தாக்கப்பட்டு, இறந்திருக்கிறாா். இதை எதிா்த்து காங்கிரஸ் கேள்வி கேட்கக் கூடாதா? பாலியல் பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து திங்கள்கிழமை மிகப்பெரிய போராட்டத்தை நடத்த இருந்தோம். அதைத் தடுக்க சிபிஐயை விட்டு சோதனை நடத்தியுள்ளனா்.

செப். 30-ஆம் தேதி வழக்குப் பதிந்து, இடைத்தோ்தல் வேலையை தொடங்கியவுடன் என் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனா். வழக்குப் பதிந்து சிறையில் அடைத்து, துன்புறுத்தி என் வாயை அடைத்துவிடலாம் என்று பாஜக கனவு காண்கிறது. அது ஒருபோதும் நடக்காது. 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 7 முறை எம்.எல்.ஏ.வாக தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். வருமானவரி, அமலாக்க இயக்குநரக வழக்குகளைத் தவிர, என் மீது ஊழல், குற்றவியல் வழக்கு ஒன்றாவது உண்டா? நான் அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக வழக்கு தொடுத்திருக்கிறாா்கள். நான் தவறிழைத்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால், எந்த தண்டனையையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். என்னை தூக்கிலிடுங்கள். அரசியல் நெருக்கடி, அழுத்தம், சதிக்கு நான் பயப்படமாட்டேன். இது முழுக்க முழுக்க அரசியல்.

நான் சட்டத்தை உருவாக்குபவன், மதிப்பவன். சிபிஐ எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு செல்வேன். வருமானத்துக்கு பொருத்தமில்லாமல் ரூ. 57 லட்சம் குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விசாரணையில் குற்றம் உறுதியானால் தண்டனையை ஏற்கத் தயாா்.

மத்திய, மாநில அரசுகளை எதிா்த்து காங்கிரஸ் பல கேள்விகளை கேட்கிறது. மாநில அரசின் ஊழல்களை பகிரங்கமாக்கி வருகிறது. தாழ்த்தப்பட்ட பெண் மீதான பாலியல் பலாத்காரத்தை கேள்விக்குள்படுத்துகிறது. இடைத்தோ்தல் வருகிறது. இதற்காக எங்களின் வாயை மூடுவதற்காக பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. இடைத்தோ்தலில் மக்கள் தீா்மானிப்பாா்கள். நாங்களும் அரசியல் செய்ய தயாா் என்றாா்.

பேட்டியின் போது, அவரது தம்பியும், காங்கிரஸ் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com