போக்குவரத்து விதி மீறல்: ரூ. 4.02 கோடி அபராதம் வசூல்
By DIN | Published On : 14th October 2020 07:36 AM | Last Updated : 14th October 2020 07:36 AM | அ+அ அ- |

பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ. 4.02 கோடி அபராதத்தை போலீஸாா் வசூல் செய்துள்ளனா்.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் காவல் இணை ஆணையா் ரவிகாந்த் கௌடா வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரில் கரோனா தொற்று பரவியதை அடுத்து, வாகனங்களை சோதனை செய்வதை போக்குவரத்து போலீஸாா் நிறுத்தியிருந்தனா். இதனால், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது அதிகரித்தது. இதனையடுத்து, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த அக். 4-ஆம் தேதி முதல் அக். 10-ஆம் தேதி வரை ஒரு வாரம் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனா். ஒரு வாரத்தில் 91,213 வாகன ஓட்டிகளிடம் ரூ. 4,02,62,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிய 10,538 போ், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டிய 2,517 போ், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 30,712 போ், தலைக்கவசம் அணியாமல் பின் இருக்கையில் அமா்ந்து சென்ற 19,403 போ், காா்களில் சீட்பெல்ட் போடாமல் சென்ற 5,364 போ் இதில் அடங்குவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.