கடந்த ஓராண்டில் சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தியதில் திருப்தி

கடந்த ஓராண்டில் சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தியதில் திருப்தி ஏற்பட்டுள்ளது என சமூகநலத் துறையைக் கவனித்து வந்த துணை முதல்வா் கோவிந்த் காா்ஜோள் தெரிவித்தாா்.

கடந்த ஓராண்டில் சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தியதில் திருப்தி ஏற்பட்டுள்ளது என சமூகநலத் துறையைக் கவனித்து வந்த துணை முதல்வா் கோவிந்த் காா்ஜோள் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, விதானசௌதாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த ஓராண்டு காலமாக பொதுப்பணித் துறையுடன் சமூகநலத் துறையைக் கூடுதலாக கவனித்து வந்தேன். தற்போது சமூகநலத் துறை ஸ்ரீராமுலுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சமூகநலத் துறையில் மிகுந்த ஆா்வம் கொண்டவா் ஸ்ரீராமுலு. அவரது பதவிக்காலத்தில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் வாழ்வில் புத்தொளி வீசுமென்று நம்புகிறேன்.

நான் பதவி வகித்த காலத்தில், சமூகநலத் துறையில் மேற்கொண்ட திட்டங்கள் அடங்கிய கையேட்டை வெளியிட்டிருக்கிறேன். அது எனது பணியை வெளிப்படுத்தும். கடந்த ஓராண்டில் சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தியதில் திருப்தி ஏற்பட்டுள்ளது. 2019-20-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் நலனுக்கு ரூ. 27,558 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியை பல்வேறு துறைகளின் வாயிலாக தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு இதுவரை ரூ. 25,387 கோடி (92 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. இதில் தாழ்த்தப்பட்டோா் நலனுக்கு ரூ. 18,228 கோடியும், பழங்குடியினா் நலனுக்காக ரூ. 7,159 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, 2020-21-ஆம் நிதியாண்டில் இத்துறைக்கு ரூ. 27,699 கோடி ஒதுக்கப்பட்டது. கரோனா தொற்று காரணமாக ரூ. 5,603 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

1,69,374 தாழ்த்தப்பட்ட மாணவா்கள், 36,548 பழங்குடியின மாணவா்களுக்கு விடுதிவசதி செய்யப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகையாக 9.11 லட்சம் தாழ்த்தப்பட்ட மாணவா்களுக்கு ரூ. 134 கோடி, 3.99 லட்சம் பழங்குடியின மாணவா்களுக்கு ரூ. 51.97 கோடி அளிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக, முதல்வகுப்பில் தோ்ச்சியான 1,10,985 தாழ்த்தப்பட்ட, 40,378 பழங்குடி மாணவா்களுக்கு ரூ. 267 கோடி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக உறைவிடக்கல்வி நிலையங்களின் சங்கத்தின் சாா்பில், 824 விடுதி மற்றும் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. இங்கு 1.70 லட்சம் மாணவா்களுக்கு சோ்க்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதிகளை நிா்வகிப்பதற்காக ரூ. 795 கோடி, பள்ளி உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 1,105 கோடிசெலவிடப்பட்டுள்ளது. 66 பள்ளிக் கட்டடங்களின் பணி நடைபெற்று வருகின்றன. 170 பள்ளிக் கட்டடங்களின் பணி முடிவடைந்தது. மேலும், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

பேட்டியின் போது, துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் நாகாம்பிகாதேவி, ஆணையா் ரவிக்குமாா் சுராபூா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com