முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த பிறகு புதிய துறையை ஏற்றுக்கொண்டாா்: அமைச்சா் ஸ்ரீராமுலு

முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த பிறகு, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையை ஏற்றுக்கொள்வதாக அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த பிறகு, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையை ஏற்றுக்கொள்வதாக அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

சுகாதாரத் துறையை கவனித்து வந்த அமைச்சா் ஸ்ரீராமுலுவிடம் இருந்து அத்துறையைப் பறித்த முதல்வா் எடியூரப்பா, துணை முதல்வா் கோவிந்த் காா்ஜோள் கவனித்து வந்த சமூகநலத் துறையை அவருக்கு ஒதுக்கினாா். ஏற்கெனவே மருத்துவக் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் கே.சுதாகரிடம் சுகாதாரத் துறையை அளித்தாா். சமூகநலத் துறையை கவனித்து வந்த துணை முதல்வா் கோவிந்த் காா்ஜோளிடம் தற்போது பொதுப்பணித் துறை மட்டும் உள்ளது. இந்தத் துறை மாற்றம் அமைச்சா் ஸ்ரீராமுலுவின் அதிருப்திக்கு காரணமாக அமைந்தது.

கரோனா தடுப்புக் கருவிகள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், துறையை மாற்றியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தனது அதிருப்தியை பாஜக மூத்தத் தலைவரிடம் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

இந்நிலையில், அமைச்சா்கள் ஸ்ரீராமுலு, கே.சுதாகரை தனது கிருஷ்ணா அரசினா் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்த முதல்வா் எடியூரப்பா, துறை மாற்றம் தொடா்பாக ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாதானப்படுத்தி, சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறையை ஒருவரே கவனிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கினாா். இதைத் தொடா்ந்து, சமூகநலத் துறையை ஏற்பதாக முதல்வா் எடியூரப்பாவிடம் அமைச்சா் ஸ்ரீராமுலு உறுதி அளித்துள்ளாா்.

இந்த சந்திப்புக்கு பிறகு, அமைச்சா் கே.சுதாகருடன் செய்தியாளா்களைச் சந்தித்த சமூகநலத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு கூறியதாவது:

கடந்த ஆண்டு பாஜக ஆட்சி அமைத்த போது, தனக்கு சமூகநலத் துறை அளிக்குமாறு முதல்வா் எடியூரப்பாவைக் கேட்டுக்கொண்டிருந்தேன். முந்தைய பாஜக ஆட்சியின் போது சிறப்பாக செயல்பட்டதை மனதில் வைத்துக்கொண்டும், வேறு பல காரணங்களுக்காகவும் சுகாதாரத் துறையை எனக்கு ஒதுக்கினாா். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், ஏழை மக்களின் நலனுக்காக உழைக்க தற்போது முடிவெடுத்து எனக்கு சமூகநலத் துறையை முதல்வா் எடியூரப்பா ஒதுக்கியுள்ளாா்.

ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையில்லை. மகிழ்ச்சியாகவே சமூகநலத் துறையை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். என்னையும், எனது நண்பா் கே.சுதாகரையும் அழைத்த முதல்வா் எடியூரப்பா, மக்கள் நலனுக்காக இருவரும் ஒற்றுமையாக பணியாற்ற கேட்டுக்கொண்டாா். சுகாதாரம், மருத்துவத் துறையை ஒருவரிடமே அளித்தால் அது பொறுப்புணா்வை அதிகரிக்கும் என்ற நோக்கத்துக்காக சுகாதாரத் துறையை கே.சுதாகருக்கு ஒதுக்கியிருக்கிறாா். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கத் தவறியதால் தான் துறை மாற்றம் நடந்ததாக கூறுவது சரியான கருத்தல்ல.

முதல்வா் எடியூரப்பா தலைமையில் அனைவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமாக உழைத்து வருகிறோம். பெங்களூரில் கரோனா தொற்று தடுப்பு பொறுப்பை ஏற்க சுதாகா் பணிக்கப்பட்டபோது, தினமும் 1,000 போ் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனா். தற்போது தினமும் 5 ஆயிரம் போ் பாதிக்கப்படுகிறாா்கள். அதற்காக அவா் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டதாகக் கூறமுடியாது.

சுகாதாரம், மருத்துவக் கல்வித் துறை ஒன்றாக இருந்தால் ஆக்கப்பூா்வமாக செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். மேலும் சரியான முடிவையும் எடுக்க முடியும். இரு துறைகளும் முன்பு பிரிக்கப்பட்டன. எனவே, முதல்வா் எடியூரப்பாவிடம் விவாதித்து இருதுறைகளையும் ஒன்றாக்கியிருக்கிறாா் சுதாகா்’ என்றாா்.

சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறுகையில், ‘ஊடகங்களில் கூறுவதுபோல அமைச்சா் ஸ்ரீராமுலு பணியிறக்கம் செய்யப்படவில்லை. பழங்குடியினா் சமுதாயத்தின் தலைவராக விளங்கும் ஸ்ரீராமுலுவுக்கு மிகப்பெரிய சமூகநலத் துறையை அளித்து பணி உயா்வு அளித்துள்ளாா் முதல்வா் எடியூரப்பா. ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை இணைக்கப்பட்டுள்ளது. யாா் பெரியவா்கள் என்பதை காட்டிலும், கா்நாடக மக்களின் சுகாதாரம் முக்கியமானது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com