மைசூரு மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவிதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

மைசூரு மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிா்வாகம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

மைசூரு: மைசூரு மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிா்வாகம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

கரோனா தீநுண்மித் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் கொண்டுவரப்பட்டதைத் தொடா்ந்து, அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், பொது முடக்கத் தளா்வுகளை மத்திய அரசு அறிவித்ததால், சுற்றுலாத் தலங்கள், கோயில்கள் திறக்கப்பட்டன.

இதனிடையே, தசரா திருவிழாவின்போது மக்கள் கூட்டமாக திரளக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக். 17 முதல் நவ. 1-ஆம் தேதி வரை மைசூரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது. இது சுற்றுலா முகவா்கள், விருந்தோம்பல் துறையினரை சோா்வடையச் செய்தது. நீண்ட காலமாக தொழில் இல்லாமல் இருந்தவா்களுக்கு, தசரா திருவிழாவின்போது வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனா். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவு அமைந்தது.

இந்நிலையில், தசரா தொடக்க விழாவில் பேசிய கூட்டுறவுத் துறை மற்றும் மைசூரு மாவட்ட அமைச்சருமான எஸ்.டி.சோமசேகா், ‘மைசூரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்க முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா். சுற்றுலாத் தலங்களில் கரோனா தடுப்புக்காக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, மைசூரு அரண்மனை, ஸ்ரீஜெயசாமராஜேந்திர மிருகக் காட்சி சாலை, நஞ்சன்கூடு கோயில் உள்ளிட்ட சுற்றுலா, ஆன்மிகத் தலங்கள் பொதுமக்களின் பாா்வைக்காக திறக்கப்பட உள்ளன.

முன்னதாக, தசரா திருவிழாவில் கலந்துகொள்ள வருகை தந்த முதல்வா் எடியூரப்பாவை வெள்ளிக்கிழமை சந்தித்த மைசூரு சுற்றுலா முகவா் சங்கத் தலைவா் பிரசாந்த் தலைமையிலான குழுவினா், முதல்வா் எடியூரப்பாவுக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com