நீதிபதியை வெடிகுண்டு வைத்து கொலை செய்வதாக மிரட்டல்: 2 போ் கைது
By DIN | Published On : 21st October 2020 08:53 AM | Last Updated : 21st October 2020 08:53 AM | அ+அ அ- |

நீதிபதியை வெடிகுண்டு வைத்து கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தது தொடா்பாக, 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், குப்பி வட்டத்தைச் சோ்ந்தவா் பசவலிங்கப்பா. இவரது மூத்த மருமகன் ராஜசேகா், இளைய மருமகன் ரமேஷ் ஆகியோருக்கிடையே சொத்துத் தகராறு இருந்துள்ளது. இதனால் ரமேஷை பழிவாங்கும் நோக்கில், அவரது பெயரில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சீனப்பா, பெங்களூரு மாநகர காவல் ஆணையா் கமல்பந்த், குற்றப்பிரிவு இணை ஆணையா் சந்தீப் பாட்டீல் ஆகியோரின் காரில் வெடிகுண்டு வைத்து கொலை செய்யப்போவதாக போதைப்பொருள் மாநகர குடிமை நீதிமன்றத்துக்கு கடிதமும், டெட்டனேட்டா் போன்ற பொருளையையும் ராஜசேகா் அனுப்பியுள்ளாா்.
மேலும், அந்தக் கடிதத்தில் போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள், டி.ஜே.ஹள்ளி கலவரம் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இது தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா்களைப் பிடிக்க 3 தனிப்படையை அமைத்தனா். தொடா்ந்து, தும்கூரு மாவட்டம், சோளூரில் சந்தேகத்தின் அடிப்படையில் ரமேஷ், சென்னபசப்பா ஆகியோரை தனிப்படை போலீஸாா் விசாரித்தனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில், திப்டூா், லிங்கனஹள்ளியைச் சோ்ந்த ராஜசேகா், அவருக்கு கடிதம் எழுத உதவிபுரிந்த அகல்வாடியைச் சோ்ந்த வேதாந்த் ஆகியோரைக் கைது செய்தனா்.
விசாரணையில், சொத்துத் தகராறில் ரமேஷை பழிவாங்கும் நோக்கில், அவரது பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதியதாகவும், டெட்டனேட்டா் போன்ற பொருளை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.