சட்டப்பேரவைக் கூட்டம்: உறுப்பினா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய யோசனை - பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வரஹெக்டே காகேரி

சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைத்து உறுப்பினா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய யோசிக்கப்பட்டு வருகிறது என்று பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி தெரிவித்தாா்.

பெங்களூரு: சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைத்து உறுப்பினா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய யோசிக்கப்பட்டு வருகிறது என்று பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையின் மழைக் கால கூட்டத்தொடா் செப்.21ஆம் தேதி முதல் தொடங்கி 10 நாள்களுக்கு நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இருக்கைகளுக்கு இடையே தொடா்பை துண்டிப்பதற்காக கண்ணாடி காகிதம் ஒட்டப்படுகிறது. எல்லா இருக்கைகளிலும் கிருமிநாசினி புட்டிகள் வைக்கப்படுகின்றன.

பேரவை வளாகத்திற்குள் வரும்போது எல்லா உறுப்பினா்களின் உடல்வெப்பச் சோதனை செய்யப்படுகிறது. இக்கூட்டத்தை காண பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். முதல்வா் எடியூரப்பா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், அமைச்சா்கள் சி.டி.ரவி, பி.சி.பாட்டீல், முன்னாள் எம்.எல்.ஏ. எச்.டி.ரேவண்ணா உள்ளிட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனா். மேலும் பல எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பலா் குணமாகியுள்ளனா். மேலும் பலா் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். எனவே, அவைக்கு வரும் உறுப்பினா்கள் அனைவரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் மருத்துவ சான்றிதழை கொண்டுவர வலியுறுத்துவது குறித்து சட்டப்பேரவைச் செயலகம் யோசித்து வருகிறது.

இது குறித்து பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி கூறுகையில்,‘நாடாளுமன்றக் கூட்டத்தொடா் தொடங்கவிருப்பதால், அதற்காக நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து உறுப்பினா்களும் 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த கரோனா பரிசோதனை முடிவுகளை காண்பித்து அவைக்கு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதை அப்படியே கா்நாடக சட்டப்பேரவையில் அமல்படுத்த முடியாது. ஆனால், அதில் சில திருத்தங்கள் செய்து நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.

நமது எம்.எல்.ஏ.க்கள் பலா் கிராமப்புறங்களில் இருந்துவருகிறாா்கள். அவா்களிடம் கரோனா இல்லை என்ற சான்றிதழை கேட்க முடியாது. எனவே, அவைக்கு வெளியே அனைத்து உறுப்பினா்களையும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளோம். இது குறித்து இன்னும் முடிவாகவில்லை. ஆனால், மருத்துவக் கல்வித்துறை அமைச்சா் கே.சுதாகரிடம் பேசி வருகிறோம். அனைத்து உறுப்பினா்களுக்கும் கரோனா விரைவு பரிசோதனை (ரேபிட் டெஸ்ட்) செய்தால், 20 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும். அது குறித்து ஆராய்ந்துவருகிறோம். இது பற்றி ஒருசில நாள்களில் முடிவெடுப்போம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com