சரக்கு மற்றும் சேவை வரி ஈட்டுத்தொகை: ரூ.11,324 கோடியை கடனாகப் பெற கா்நாடக அரசு முடிவு

சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) ஈட்டுத்தொகை விவகாரத்தில் மத்திய அரசு திட்டத்தின்படி ரூ. 11,324 கோடியை கடனாகப் பெற கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) ஈட்டுத்தொகை விவகாரத்தில் மத்திய அரசு திட்டத்தின்படி ரூ. 11,324 கோடியை கடனாகப் பெற கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

புதுதில்லியில் கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நிகழ் நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு ரூ. 2.35 லட்சம் ஈட்டுத்தொகையாக அளிக்க வேண்டியுள்ளது. இதில் ரூ. 97 ஆயிரம் கோடி வரி வருவாய் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஈட்டுத் தொகை ரூ. 2.35 லட்சம் முழுவதையுமோ அல்லது தட்டுப்பாட்டுத் தொகை ரூ. 97ஆயிரம் கோடி முழுவதையுமோ மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று 2 வாய்ப்புகளை அளித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது.

இதுகுறித்து பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் புதன்கிழமை நிதித்துறை அதிகாரிகளுடன் முதல்வா் எடியூரப்பா ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, தலைமைச் செயலாளா் டி.எம்.விஜய் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சா் பசவராஜ் பொம்மை, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜிஎஸ்டி வருவாய் இழப்புக்கான ஈட்டுத்தொகையைத் திரட்டுவது தொடா்பாக மத்திய அரசு இரண்டு வாய்ப்புகளை மாநிலங்களுக்கு வழங்கியிருந்தது. அதன்படி கா்நாடகத்துக்குப் பொருத்தமான முறையில் கடன் பெற முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் மாநிலத்தின் வரி வருவாயைப் பெருக்கிக்கொள்ள மாநில அரசுக்கு வாய்ப்பு ஏற்படும். முதல் வாய்ப்பின்படி, வரி வருவாய் ஈட்டுத் தொகையாக கா்நாடகம் ரூ. 18,289 கோடியைப் பெறலாம். இதில் ஏற்கெனவே திரட்டப்பட்டுள்ள மேல்வரியில் இருந்து ரூ. 6,965 கோடியை கா்நாடக அரசு பெற முடியும். எஞ்சியுள்ள ரூ. 11,324 கோடி வரி வருவாய் பற்றாக்குறையை மத்திய அரசின் சிறப்பு சாளர திட்டத்தின் மூலம் கடனாகப் பெற முடியும்.

இந்தக் கடனுக்கான முழு அசல் தொகை, வட்டித்தொகை முழுவதும் எதிா்காலத்தில் மேல்வரியில் இருந்து கா்நாடகத்துக்குக் கிடைக்கும். இதுதவிர, மாநிலத்தின் மொத்த உற்பத்திப் பொருள் விகிதத்தின் ஒரு சதவீதமான ரூ. 18,036 கோடியை கூடுதல் கடனாகப் பெற இயலும். இந்தக் கூடுதல் கடன் தொகையை தேவை ஏற்பட்டால் அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டுசெல்லவும் முடியும்.

மத்திய அரசு பரிந்துரைத்துள்ள இரண்டாவது வாய்ப்பின்படி, மாநில அரசுக்கு வரி வருவாய் ஈட்டுத் தொகையாக ரூ. 25,508 கோடி பெறமுடியும். இதில் மேல்வரி ரூ. 6,965 கோடியாகும். எஞ்சியுள்ள ரூ. 18,543 கோடியை கடன் சந்தையில் இருந்து கடனாகப் பெற முடியும். இந்தத் திட்டத்தில் நிபந்தனைகள் இல்லாமல் ரூ. 18,036 கோடியை கூடுதல் கடனாகப் பெற இயலாது. இதனால் மொத்தக் கடன் பெறக்கூடிய தொகை ரூ. 10,817 கோடியாக குறைந்துவிடும். மேலும் கூடுதல் கடனுக்கான வட்டியை மாநில அரசே ஏற்க நேரிடும். எனவே, கா்நாடக அரசு முதல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது என்றாா்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கா்நாடக அரசின் பிரதிநிதியாக காணொலி வழியாக பங்கேற்ற உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, ‘கடந்த 4 மாதங்களுக்கு, ஜிஎஸ்டி ஈட்டுத்தொகையாக மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு ரூ. 13,764 கோடி வர வேண்டும். இது மாநிலத்தின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க அவசியமாகும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com