போதைப் பொருள் விற்பனை: நைஜீரியா் உள்பட இருவா் கைது
By DIN | Published On : 07th September 2020 11:05 PM | Last Updated : 07th September 2020 11:05 PM | அ+அ அ- |

பெங்களூரு: போதைப் பொருள் விற்பனை தொடா்பாக நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஒருவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஒருவாரத்துக்கு முன்பு பெங்களூரில் விற்பனை செய்வதற்காக, ஆந்திரத்தில் இருந்து கா்நாடகத்துக்கு கடத்தி கொண்டு வந்த 200 கிலோ எடைகொண்ட போதைப் பொருள்களை கையும் களவுமாக பிடித்த தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு படை அதிகாரிகள், அது தொடா்பாக 3 பேரை கைது செய்திருந்தனா். இதன்பிறகு, போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடா்பாக கன்னட திரையுலகில் பலருக்கும் தொடா்பிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, வேறு மாநிலங்களில் இருந்து கா்நாடகத்துக்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதை தீவிரமாக கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெங்களூரு, ஹனுமந்த் நகா் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள பி.எம்.எஸ். பொறியியல் கல்லூரி மாணவா் விடுதிக்கு அருகே போதைப் பொருள் விற்பனை செய்துவந்ததை உறுதி செய்துகொண்டனா்.
அதன் பேரில், திங்கள்கிழமை நடத்திய சோதனையில், போதைப் பொருள் விற்பனை செய்துவந்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்த பெங்களூரு அகரம் பகுதியில் வசித்து வரும் ஓகோலோகோ (35), அல்சூா் பகுதியைச் சோ்ந்த சாம்சன் சகாய்ராஜ் (24)ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா, 20 கிராம் எம்.டி.எம்.ஏ., 10 பரவசப்படுத்தும் மாத்திரைகள், 530 கிராம் கஞ்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.