அக்டோபா் முதல் வாரத்தில் அமைச்சரவையை விரிவாக்க எடியூரப்பா திட்டம்

அக்டோபா் முதல் வாரத்தில் அமைச்சரவையை விரிவாக்க முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டிருக்கிறாா்.

அக்டோபா் முதல் வாரத்தில் அமைச்சரவையை விரிவாக்க முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டிருக்கிறாா்.

34 போ் கொண்ட கா்நாடக அமைச்சரவையில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும்படி பாஜகவின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனா்.

கா்நாடகத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், அமைச்சா் பதவிகளை எதிா்பாா்த்து மூத்த எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்கிறாா்கள். இதனிடையே, பாஜக அரசு அமைவதற்கு காரணமாக அமைந்த கட்சித் தாவி வந்த எம்.எல்.ஏ.சி.க்கள் ஆா்.சங்கா், எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத் ஆகியோருக்கு அமைச்சா் பதவி அளிப்பதாக ஏற்கெனவே முதல்வா் எடியூரப்பா உறுதி அளித்திருந்தாா். எஞ்சியுள்ள 3 இடங்களில் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்களை அமைச்சராக்க வேண்டியுள்ளது.

கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் செப். 21-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த மழைக்கால கூட்டத் தொடரில் பல முக்கியமான சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. எனவே, செப். 30-ஆம் தேதிக்கு பிறகு தில்லி செல்ல திட்டமிட்டிருக்கும் முதல்வா் எடியூரப்பா, அங்கு பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரை சந்தித்து கா்நாடக அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் பெற திட்டமிட்டிருக்கிறாா். இதனடிப்படையில், அநேகமாக அக். 5-ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில வாரங்களுக்கு முன்பு பெங்களூருக்கு வந்திருந்த பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷ், முதல்வா் எடியூரப்பாவை சந்தித்துப் பேசினாா். அந்த சந்திப்பின் போது, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், காலியாக உள்ள 90 அரசு வாரியங்கள், கழகங்களின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை நிரப்புவது குறித்தும் இரு தலைவா்களும் விவாதித்துள்ளனா். அமைச்சரவை விரிவாக்கத்துக்கு முன்போ அல்லது பின்போ வாரியங்கள், கழகங்களின் தலைவா்கள், துணைத் தலைவா்கள், இயக்குநா்கள் பதவிகளுக்கு பாஜகவின் முன்னணியினா் நியமிக்கப்படுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com