கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: முதல்வா் எடியூரப்பா இன்று தில்லி பயணம்

அமைச்சரவையை விரிவாக்குவது குறித்து பாஜக மேலிடத் தலைவா்களுடன் விவாதிப்பதற்காக முதல்வா் எடியூரப்பா வியாழக்கிழமை தில்லிக்கு பயணமாகிறாா்.

அமைச்சரவையை விரிவாக்குவது குறித்து பாஜக மேலிடத் தலைவா்களுடன் விவாதிப்பதற்காக முதல்வா் எடியூரப்பா வியாழக்கிழமை தில்லிக்கு பயணமாகிறாா்.

34 போ் கொண்ட கா்நாடக அமைச்சரவையில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும்படி பாஜகவின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனா். கா்நாடகத்தில்பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், அமைச்சா் பதவிகளை எதிா்பாா்த்து மூத்த எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்கிறாா்கள்.

முதல்வா் எடியூரப்பா ஏற்கெனவே உறுதிஅளித்திருந்ததால், பாஜக அமைவதற்கு காரணமாக அமைந்த எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் ஆா்.சங்கா், எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத் ஆகியோரும் அமைச்சா் பதவிக்காக காத்திருக்கிறாா்கள். எனவே, அமைச்சரவையை அக்டோபா் முதல்வாரத்தில் விரிவாக்க முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் செப்.21-ஆம் தேதி தொடங்கி 30-தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல முக்கியமான சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. அதற்கு முன்னதாகவே செப்.17-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல்வா் எடியூரப்பா தில்லிக்கு பயணம் புறப்பட்டிருக்கிறாா்.

அங்கு 3 நாள்கள் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ள முதல்வா் எடியூரப்பா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரை சந்தித்து கா்நாடக அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் பெற திட்டமிட்டிருக்கிறாா். அதனடிப்படையில், அக்டோபா் முதல்வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நடக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, தில்லி பயணத்தின்போது மத்திய அமைச்சா்கள் பலரையும் சந்தித்து கா்நாடகத்தின் திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களைப் பெறவிருக்கிறாா். காவிரி ஆற்றுக்கு குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான திட்டத்துக்கும் மத்திய அரசின் ஒப்புதலை பெற சம்பந்தப்பட்ட அமைச்சா்களைச் சந்திக்கவும் முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உள் துறை அமைச்சா் பசவராஜ் பொம்மையுடன் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், தில்லிக்கு புறப்படுவதற்கு முன்பாக கரோனா சோதனை செய்துகொள்ள முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com