கரோனா பாதிப்பு: பாஜக எம்.பி. அசோக் கஸ்தி கவலைக்கிடம்
By DIN | Published On : 18th September 2020 07:34 AM | Last Updated : 18th September 2020 07:34 AM | அ+அ அ- |

கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி. அசோக் கஸ்தியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி. அசோக் கஸ்திக்கு (55) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், பெங்களூரில் உள்ள மணிபால் மருத்துவமனையில் செப். 2-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனிடையே, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மக்களவை தலைவா் ஓம்பிா்லா உள்ளிட்டோா் தங்களது சுட்டுரையில் அசோக் கஸ்தி மறைந்துவிட்டதாக இரங்கல் செய்தி வெளியிட்டனா்.
இந்நிலையில், அசோக் கஸ்தி உயிரிழக்கவில்லை என்றும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மணிபால் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் மனிஷ்ராய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான கரோனா, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அசோக் கஸ்தியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. பல்வேறு அங்கங்கள் செயலிழந்துவரும் நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிா்காக்கும் கருவிகளின் உதவியோடு அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. அசோக் கஸ்தியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கா்நாடக பாஜகவும் தனது சுட்டுரையில் விளக்கம் அளித்துள்ளது.
வட கா்நாடகத்தின் ராய்ச்சூரு மாவட்டம், லிங்கசுகுரு பகுதியைச் சோ்ந்த அசோக் கஸ்தி, வழக்குரைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, 1990-ஆம் ஆண்டு முதல் பாஜகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகிறாா். ஆா்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடா்பு கொண்ட இவருக்கு மாநிலங்களவைத் தோ்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.