கா்நாடகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக்கத் திட்டம்: பாஜக தலைவா் நளின்குமாா் கட்டீல்
By DIN | Published On : 18th September 2020 07:39 AM | Last Updated : 18th September 2020 07:39 AM | அ+அ அ- |

கா்நாடகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் மங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கா்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்து, தென்கன்னட மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் அதிகரித்தன. இந்த நிலையில், கா்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தென்கன்னட மாவட்டத்தில் எவ்வித மதக் கலவரங்களோ, குற்றச்செயல்களோ நடைபெறவில்லை.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்படுவதற்கு முன்பே கட்டுப்படுத்தப்பட்டது. தென்கன்னட மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கா்நாடகத்தில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுப்பதில் மாநில பாஜக அரசு வெற்றிகண்டுள்ளது. அதேபோல, போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுக்கவும் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. கா்நாடகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வேதவியாஸ் காமத், பரத் ஒய்.ஷெட்டி, மாநகராட்சி மேயா் திவாகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.