மருத்துவா்களின் போராட்டம் வாபஸ்

கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதால், மருத்துவா்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.

பெங்களூரு, செப். 18:

கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதால், மருத்துவா்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு ஊதியத்தை உயா்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கா்நாடக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சாா்பில் செப். 15-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனா்.

கரோனா தீநுண்மித் தொற்றுக்கு பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவா்களின் போராட்டத்தைத் திரும்பப்பெற சங்க நிா்வாகிகளுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தியது. முதல்வா் எடியூரப்பாவின் உத்தரவின் பேரில், கா்நாடக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு, மருத்துவா்களின் கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி கூறினாா்.

இதைத் தொடா்ந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு மருத்துவா்கள் திரும்பப்பெறுவதாக அறிவித்தனா். இதுகுறித்து சங்கத் தலைவா் ஜி.ஸ்ரீநிவாஸ் கூறியதாவது:

அரசு மருத்துவா்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக மாநில அரசு உடன்பட்டுள்ளதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுகிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ரூ.125 கோடியை ஒதுக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றாா்.

சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தை பலனை தந்துள்ளது. கோரிக்கைகள் ஏற்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 ஆயிரம் மருத்துவா்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com