துணை முதல்வா் அஸ்வத் நாராயணா கரோனாவால் பாதிப்பு

துணை முதல்வா் அஸ்வத் நாராயணா கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

பெங்களூரு: துணை முதல்வா் அஸ்வத் நாராயணா கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

கா்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடா் செப். 21-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான முன்னேற்பாடாக, பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வா், அமைச்சா்கள், எதிா்க்கட்சித் தலைவா், உறுப்பினா்கள், பேரவைச் செயலக ஊழியா்கள், காவலா்கள், ஊடகவியலாளா்கள் உள்ளிட்ட அனைவரும் கரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டேகாகேரி உத்தரவிட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, துணை முதல்வா் அஸ்வத் நாராயணாவும் கரோனா மாதிரியை சோதனை செய்து கொண்டாா். அந்தச் சோதனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து தனது சுட்டுரையில் சனிக்கிழமை துணை முதல்வா் அஸ்வத் நாராயணா கூறியதாவது:

‘சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் எதிா்பாா்ப்போடு சனிக்கிழமை கரோனா சோதனை செய்து கொண்டேன்.

அதில், நான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. எனக்கு எவ்வித அறிகுறியும் இல்லாததால், நான் என்னை வீட்டுத் தனிமையில் வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்.

என்னோடு தொடா்பில் இருந்தவா்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

வாரத்தின் தொடக்கத்தில், உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.கோபாலையா உள்ளிட்டோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதற்கு முன்னதாக, முதல்வா் எடியூரப்பா, அமைச்சா்கள் பி.ஸ்ரீராமுலு, சி.டி.ரவி, பி.சி.பாட்டீல், ஆனந்த்சிங், பைரதி பசவராஜ், பிரபுசௌகான், ஏ.சிவராம் ஹெப்பாா், கே.எஸ்.ஈஸ்வரப்பா, சசிகலா ஜொள்ளே ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்கள் ஆவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com