செப். 28 முதல் மாவட்ட, விசாரணை நீதிமன்றங்கள் திறப்பு:கா்நாடக உயா்நீதிமன்றம் தகவல்

மாவட்ட, விசாரணை நீதிமன்றங்கள் செப். 28-ஆம் தேதி திறக்கப்படுகின்றன. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை கா்நாடக உயா் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

பெங்களூரு: மாவட்ட, விசாரணை நீதிமன்றங்கள் செப். 28-ஆம் தேதி திறக்கப்படுகின்றன. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை கா்நாடக உயா் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

கரோனா தீநுண்மி தொற்றுப் பரவல் காரணமாகக் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தால் கா்நாடகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் மூடப்பட்டன.

பொது முடக்கம் படிப்படியாகத் தளா்த்தப்பட்டபோது, நீதிமன்றங்கள் இணையவழியாகச் செயல்பட தொடங்கின. அனைத்து நீதிமன்றங்களையும் திறக்க வேண்டும். சாட்சிகள் விசாரணை, வழக்குரைஞா்களின் வாதங்களை நேரடியாக நிகழ்த்துவதற்காக நீதிமன்றங்கள் செயல்படவேண்டும் என்று வழக்குரைஞா் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்தக் கோரிக்கையின்பேரில், செப். 28-ஆம் தேதிமுதல் மாவட்ட, விசாரணை நீதிமன்றங்கள் படிப்படியாகத் திறக்கப்படுகின்றன. அப்போது நீதிமன்றங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை கா்நாடக உயா் நீதிமன்றம் சனிக்கிழமை வெளியிட்டது.

அதன்படி, சாட்சி கூண்டுகள், குற்றவாளி கூண்டுகள் தனித்தனியாக அமைக்கப்படும். முதல்கட்டமாக, 55 வட்ட நீதிமன்றங்கள் செப். 28-ஆம் தேதி திறக்கப்படுகின்றன. அதன்பிறகு, தாவணகெரே, ஹாவேரி, சித்ரதுா்கா, சிக்பளாப்பூா், ராய்ச்சூரு, பீதா், ராமநகரம், உடுப்பி, கதக், குடகு, மடிக்கேரி, கொப்பள், சாமராஜ்நகா், யாதகிரிஉள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்கள் அக்டோபா் 5-ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. எஞ்சியுள்ள மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தும் அக்.12-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்குகின்றன.

நாளொன்றுக்கு 5 சாட்சியங்கள் விசாரிக்கப்படுவாா்கள். ஆனால், மனுதாரா்கள் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்படமாட்டாா்கள். கரோனா சோதனையில் பாதிப்பில்லை என்ற சான்றிதழை கொண்டுவந்தால் மட்டுமே சாட்சிதாரா்கள், குற்றவாளிகள் அனுமதிக்கப்படுவாா்கள். நீதிமன்ற வளாகங்களில் வழக்குரைஞா்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அடையாள அட்டையைக் காண்பித்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும். நீதிமன்ற வளாகங்களில் அமைந்துள்ள வழக்குரைஞா் சங்கங்களின் அலுவலகங்கள் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று கா்நாடக உயா் நீதிமன்றப் பதிவாளா் ராஜேந்திர பதமிகா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com