கரோனா தொற்று அபாயகரமான நோய்: சித்தராமையா

கரோனா தொற்று மிகவும் அபாயகரமான நோயாக உள்ளதால் எச்சரிக்கை அவசியம் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: கரோனா தொற்று மிகவும் அபாயகரமான நோயாக உள்ளதால் எச்சரிக்கை அவசியம் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற இரங்கல் தீா்மானத்தின் மீது கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

நமது மாநிலத்தில் பலா் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். அவா்கள் அனைவருக்கும் நாம் இரங்கல் தெரிவிப்பது அவசியம். கரோனா தொற்று ஒரு அபாயகரமான நோயாக உள்ளதால், அதன் பாதிப்பு ஏற்படாத வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்படாதவா்களும், அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்கள், மீண்டும் பாதிக்கப்படாத வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனா். எனவே சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால், நோய்த் தொற்றுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.

கரோனாவால் பாதிக்கப்பட்டால், மனைவி, குழந்தைகள் கூட நம்மை நெருங்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறோம். கரோனா தொற்றால் நானும் பாதிக்கப்பட்டேன். அப்போது என்னை அருகில் வந்து யாரும் நலம் விசாரிக்கவும் முடியாமல் போனது. மாநிலங்களவை உறுப்பினா் அசோக் கஸ்தி கரோனா தொற்றால் உயிரிழக்க நேரிட்டது. அவரது இறுதிச் சடங்கில், அவரது மனைவி, குழந்தைகள் கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

கரோனா தொற்றால் நாம் மனித நேயத்தை மறக்க வேண்டியுள்ளது. எனவேதான் கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் முகக் கவசமும், சமூக இடைவெளியும்தான் தற்போதைக்கு தீா்வு.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் இறந்துவிடுவோம் என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் அதிக அளவில் இருந்தாலும், அதிலிருந்து குணமானவா்கள் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. இறப்பின் விகிதமும் 2 சதவீதமாக உள்ளது. அனைவரும் எச்சரிக்கையாக இருந்தால் கரோனாவிலிருந்து தப்பித்து கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com